naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

17 Oct 2015

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும். தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள். – செந்தமிழன் சீமான் அறிக்கை.

நடிகர் சங்க விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


வருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த நடிகர் சங்கத்தில் நாடகங்களில், திரைப்படங்களில் புகழ் பெற்றிருக்கிற நடிகர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதா உள்ளீட்ட பல ஆளுமைகளை கொண்டிருந்த பெருமைகள் பலவைந்த மாபெரும் அமைப்பாக நடிகர் சங்கம் விளங்குகிறது.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கமாக உருவாக்கப்பட்ட இச்சங்கம் பின்னர் பிரிந்து கேரள நடிகர்களுக்கென அம்மா (AMMA) என்றும்,ஆந்திர நடிகர்களுக்கென அப்சிசி (APFCC) என்றும், கன்னட நடிகர்களுக்கென கேப்பா (KFAA) என்றும் அவரவர் மொழி சார்ந்த ,பகுதி சார்ந்த தனித்தனி சங்கங்கள் ஏற்பட்டு விட்ட பின்னரும் கூட,தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெரும்பாலும் தமிழ் நாடகங்களில், தமிழ்த்திரைப்படங்களில்களில் நடிக்கிற நடிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்ற சூழலில் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் இச்சங்கம் செயல்படுவது ஏற்புடையது அல்ல. தமிழினத்தின் பெருமை மிகு கலை அடையாளமான அய்யா நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கூட மலையாள படத்தில் நடிக்கும் முன் அங்கிருக்கும் நடிகர் சங்கமான ‘அம்மா’வில் உறுப்பினரான பின் தான் நடித்தார். எனவே, இச்சங்கம் இன்றளவும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்றிருப்பது சரியானதல்ல. தமிழ்த் திரையுலகத்திற்கு முற்றிலும் சொந்தமான இச்சங்கம் “தமிழ்நாடு நடிகர் சங்கம் “ என பெயர் மாற்றம் அடைவது தான் மிகச் சரியானதாக இருக்கும்.
மேலும் வருகிற 18 ஆம் தேதி நடைபெற உள்ள இச்சங்க தேர்தல் தொடர்பான எனது கருத்தை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகள் பேசித் தீர்த்திருக்க வேண்டியவை. ஆனால், காலம் கடந்து விட்டது. 
தேர்தலில் பங்கேற்கிற இரண்டு அணிகளிலும் எனது நண்பர்கள், என் மதிப்பிற்குரியவர்கள் இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் முக்கிய அங்கமாக திகழ்கிற இச்சங்கத்தின் தலைமையில்,முக்கியப் பொறுப்புகளில் தகுதியும், திறமையும், நேர்மையும் மிக்க தமிழர்கள் இடம் பெற வேண்டும் என்கிற எனது விருப்பத்தினை இச்சமயத்தில் நான் தெரிவிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழர்களுக்கு தலைமை தாங்கலாம் என்கிற நிலை இவ்வினத்தின் தன்மானத்திற்கு இழுக்கு. உலகிலேயே தன்மானத்திற்கு இயக்கம் தொடங்கிய தமிழினம் இன்று தனக்கு தலைமையேற்க யார் யாரையோ எதிர்பார்த்து நிற்பது அவமானம். ஒரு இனத்தின் தன்மதிப்பு என்பது அவர்களே அவர்களது இனத்திற்கு, நிலத்திற்கு தலைமை ஏற்பதாகும் இல்லையேல் அது அடிமைத்தனத்திற்குத்தான் அடித்தளமிடும். இது இனவாதமோ பாசிசமோ அல்ல. 
பிற மாநிலங்களில் செயல்படுகிற திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் தமிழர்கள் யாராவது அச்சங்கத்தில் தலைமையையோ முக்கிய பொறுப்புகளையோ ஏற்க முடியுமா?,அதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்பதை இச்சமயத்தில் ஓட்டளிக்கப் போகும் திரைப்பட நாடக கலைஞர்கள் இன உணர்வோடும் மான உணர்வோடும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
‘தகப்பன் என்பவன் பெத்தவனாக இருக்க வேண்டும், தலைவன் என்பவன் ரத்தவனாக இருக்கவேண்டும்’ என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் யாரும் வரலாம், வாழலாம், நடிக்கலாம் ஆனால் வழிநடத்தும் தலைமை தமிழர்களாக இருத்தல் வேண்டும். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற உயர்ந்த பண்பாட்டிற்கு சொந்தகாரர்களான நாம் வந்தவரை எல்லாம் வாழவைப்போம் அது எமது இனத்தின் பெருமை, சொந்தவரை மட்டுமே தலைமை ஏற்க வைப்போம் அது நமது இனத்தின் அடிப்படை உரிமை. இக்கருத்து நாட்டிற்கு மட்டுமல்ல நடிகர் சங்கத்திற்கும் பொருந்தும் என்பதை புரிந்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். நடிகர் சங்கத்தின் முக்கிய தலைமைப் பொறுப்புகளை தமிழர்களே வகிக்க வேண்டும் என்கிற உணர்வு சார்ந்த எமது கோரிக்கையை எமது கலையுலக சொந்தங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்கக் அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

3 Oct 2015

சிறப்பு முகாம் என்ற சித்தரவதை முகாம்களை உடனடியாக மூடுக. அடைத்துவைக்கபட்டிருக்கும் ஈழச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்க – சீமான் அறிக்கை

 


சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பி ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்திருக்கும் கொடுமை இன்றளவும் தொடர்கிறது. பெயர் தான் சிறப்பு முகாம் சிறைச் சாலைகளுக்கு உள்ளேயே நடத்தப்படும் இம்முகாம்கள் சிறைச்சாலைகளை விட கொடுமையான சித்தரவதை முகாம்களாக தான் செயல்பட்டு வருகிறது. திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 9 பேர் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த அக்டோபர் 1 ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுரேஷ்குமார் ஞானசௌந்தரம் என்பவர் கடந்து 3 வருடங்களாக சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் அகதியாக பதிவு செய்து தங்கியிருந்த இவரை எவ்வித நியாயமான காரணமுமின்றி கடந்த மூன்று வருடங்களுக்கு முன் காவல்துறை கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளது. இடுப்பின் கீழ் இயங்காது படுத்த படுக்கையாக இருப்பவர் சுரேஷ்குமார். தனித்து இயங்கமுடியா நிலையில் இவரது அன்றாட தேவைகளுக்கும் இன்னொருவரின் உதவி தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தனக்கு உதவிக்காக ஒருவரை நியமிக்கும் படி அரசிடம் கேட்டும் பலமுறை மனுக்கள் அளித்தும் அரசு சம்மதிக்கவில்லை. நீதிமன்றத்தை அணுகி உதவிக்கு முறையிட்டு அனுமதி பெற்றபின்னரும் அரசு அனுமதிக்கவில்லை. முகாமில் அடைக்கப்பட்டுள்ள சக ஈழ உறவுகள் தான் இவருக்குரிய அன்றாட தேவைகளுக்கான உதவிகளை செய்து வந்தனர்.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ்குமாருக்கு உதவி வந்த சக ஈழ உறவுளான நா.பகீதரன், பா.சிவனேஸ்வரன், த.மகேஸ்வரன், க. மகேஸ்வரன், க.கிருஷ்ணமூர்த்தி, க.ராஜேந்திரன், ச.சுபாஷ், க.உதயதாஸ்,செ.யுகப்பிரியன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 01.10.2015 முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அதனால் தற்போது சுரேஷ்குமாருக்கு, உதவ யாரும் இல்லாமல் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தற்காலிகமாகவேனும் ஒருவரை தன் உதவிக்கு நியமிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பொழுது அவருக்கு, பதில் எதுவும் வழங்கவில்லை என்பதுடன் எவரையும் உதவிக்கும் விடவுமில்லை. இதனால் மனவிரக்தியடைந்து தான் வாழ்வதை விட இறந்து விடலாம் என்று தனது கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் மீது காவல்துறை கொலை மிரட்டல், தற்கொலை முயற்சி போன்ற வழக்குகள் பதிவு செய்து கைது செய்திருப்பது கொடுமையிலும் கொடுமை. அநீதியான இக்கைது நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல வருடங்களாக குடும்பங்களை விட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்து, தமிழ்நாட்டில் இதர முகாம்களில் வசித்துவரும் தங்கள் உறவினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர். தங்கள் மீது பதியப்பட்டுள்ள குற்ற வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்று நீதிமன்றங்களால் விடுவித்த பின்னரும் தங்களை விடுதலை செய்யாமல் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டித்து பல முறை உண்ணாவிரதப் போராட்டம் உள்ளீட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை செவி சாய்த்து கேட்க விரும்பாமல் அரசு அவர்களை பல ஆண்டுகளாக எவ்வித சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல் நியாயமான காரணங்கள் இன்றி தடுத்து வைத்துள்ளது. தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தவறு செய்திருந்தால் சிறையில் அடையுங்கள், இல்லையெனில் எங்களை எங்கள் குடும்பங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்பதே அவர்களின் நியாயமான கோரிக்கையாகும்.

சிறப்பு முகாம்களில் வதைபடும் நம் ஈழ உறவுகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக அரசும் அங்குள்ள அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் விடுதலை செய்வதாக போலி வாக்குறுதிகள் அளிக்கின்றனர் ஆனால் உண்ணாவிரதம் கைவிடப்பட்ட பின்னர் அவர்களை விடுவிக்க மறுத்து சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கின்றனர். இப்படி வழக்கு, விசாரணையின்றி அவர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுத்து அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும் என்பதை எடுத்துக்கூறி சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும் பல தமிழ் அமைப்புகளும் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளன. ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஈழத்தில் போர் முடிந்த பிறகு அங்கே மக்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலவே, இங்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் இவ்விதமான வதை முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இது தாயக தமிழகத்திற்கும்,, இங்கு வாழும் 8 கோடி தமிழர்களுக்கும் பெருத்த தலைக்குனிவு ஆகும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், இலங்கையில் துயருற்றுவரும் ஈழத் தமிழர் விடுதலைக்காக தொடர்ச்சியாக சட்ட மன்ற தீர்மானங்கள் மூலம் குரல் கொடுத்து வரும் நிலையில், அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட தமிழகத்தில்தான் ஈழத் தமிழர்கள் இப்படியான சிறப்பு முகாம் என்ற பெயரிலான வதைமுகாம்களில் அநீதியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு நாம் தமிழர் கட்சி தெரியப்படுத்துகிறது. சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நம் ஈழ உறவுகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்த்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களின் நெடுந்துயர் போக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி கோருகிறது..

-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
நாம் தமிழர் கட்சி.

விஷ்ணுபிரியா மரணத்தை கொச்சைப்படுத்தக் கூடாது: சீமான்

கடலூர் அருகே கோண்டூரில் உள்ள தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா வீட்டுக்கு சீமான் வியாழக்கிழமை சென்றார். அங்கு விஷ்ணுபிரியாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விஷ்ணுபிரியா இறப்பு மூலம் காவல் துறையிலுள்ள நேர்மை சாகடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபிரியா இறந்து கிடந்தபோது அங்கு சென்ற காவல் கண்காணிப்பாளர், அவர் இறந்த அறைக்குள் செல்லாமலே விஷ்ணுபிரியா கையில் கடிதம் இருப்பதாக கூறியுள்ளார். அவரின் கால்கள் தரையில் தட்டிய நிலையில் இருந்துள்ளன. உடலில் காயங்களும் இருந்ததாக பெற்றோர்கள் கூறுகிறார்கள். எனவே உரிய விசாரணை நடத்திட வேண்டும்.
விஷ்ணுபிரியா தற்கொலைக்கு மேல் அதிகாரியின் நிர்பந்தமே காரணம் என்று கூறப்பட்ட நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை வேறு இடத்துக்கு இடமாற்றம் கூட செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் காதல் தோல்வி என்று அவரது மரணத்தை திசை திருப்பி கொச்சைப்படுத்தும் நிலை தான் உள்ளது.
இதனை ஏற்க முடியாது. எனவே தான் மத்திய புலனாய்வு பிரிவின் (சிபிஐ) விசாரணை கோருகிறோம்.
அனைத்துக் கட்சியினரும் சிபிஐ விசாரணை கோருவதால் அதனை முதல்வர் செயல்படுத்த வேண்டும் என்றார்.


.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்