naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

14 Jun 2015

பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.

அவை பின்வருமாறு:
நாகர்கோவில் – கா.கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர்
சிவகங்கை – வழக்கறிஞர் எழில்குமரன்
திருவாடனை -வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன்
சோழிங்கநல்லூர் – வழக்கறிஞர் இராசன்
திருப்பத்தூர் – கோட்டைக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர்
மைலம் – மருத்துவர் விஜயலெட்சுமி
அம்பத்தூர் – அன்புத்தென்னரசன்
கவுண்டம்பாளையம் – இயக்குனர் கார்வண்ணன்
கும்பகோணம்- வழக்கறிஞர் மணி செந்தில்
இயற்கெனவே, பேராவூரணி தொகுதிக்கு திலீபன் அவர்களும், சிங்காநல்லூர் தொகுதிக்கு பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களும்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது.

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம்-1
அடிமைத் தமிழ்த்தேசிய இனத்தின் மொழி மீட்சிக்காகவும், இன உரிமை மீட்சிக்காகவும் மாபெரும் அரசியல் புரட்சியினை முன்னெடுத்து தமிழின வரலாற்றில் முதல் முறையாக இன எழுச்சி அரசியல் மாநாட்டினை இரண்டு இலட்சத்திற்கும் மேலான நம் இன உறவுகளைக் கூட்டி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். மாநாட்டின் மகத்தான வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்த அனைத்து உறவுகளுக்கும், வியர்வைத்துளியினை உதிரமாக சிந்தி தாங்கள் சிறுகச்சிறுகச் சேர்த்த பொருளை நன்கொடையாக கொடுத்து உதவிய அனைத்து உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சி புரட்சிகரமான வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்-2
தமிழ்நாட்டு சிறைக்கூடங்களில் ஆயுள் தண்டனை பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடுகின்ற சிறைவாசிகளை நன்னடத்தை, உடல்நிலை, வயது போன்ற காரணங்களை கொண்டு சிறைவிதிகளின்படி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், அகதிகளாக வாழ்வுரிமைத்தேடி தமிழகம் வந்த ஈழ உறவுகளை எவ்வித விசாரணையுமின்றி சித்திரவதை செய்து தனிமைச்சிறையில் அடைத்து, சிறப்பு முகாம் என்ற பெயரில் நடக்கிற வதை முகாம்களை உடனடியாக மூட வலியுறுத்தியும் வருகிற சூலை 10-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழகத்தின் முக்கியச்சிறைச்சாலைகளாக உள்ள மதுரை, கோவை, திருச்சி, வேலூர் மற்றும் புழல் ஆகிய நடுவண் சிறைச்சாலைகளை நாம் தமிழர் கட்சி முற்றுகையிடுகிறது. அந்தப் போராட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் பெருமளவில் பங்கெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்-3
இந்தியத்தேர்தல் நடைமுறை என்பது மிகவும் சனநாயகமற்ற முறையில் உள்ளது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக அரசியல் கட்சி நடத்தி வருகிற பெரிய கட்சிகளுக்கு சார்பாக ஒருதலைபட்சமாக உள்ளது. 60 ஆண்டுகாலமாக ஒரே சின்னத்தைப் பயன்படுத்தி தேசிய மற்றும் பெரும்பாலான பிற கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதும், புதிதாக சனநாயக உரிமையின்படி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு புதிதாகச்சின்னங்களைக் கொடுத்து தேர்தலில் நிற்கச்சொல்வதும், மிகப்பெரிய சனநாயகப்படுகொலையாகும். சின்னம் ஒதுக்குதல் என்ற நடைமுறையை அறவே நீக்கி மேலைநாடுகளில் உள்ளதுபோல், எண்களையோ, வேட்பாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தையோ தேர்தல் நடைபெறும் சமயத்தில் மட்டும் கொண்டு வர வேண்டுமென இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது மற்றும் தேர்தல் சின்னங்களை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக்கொள்வதோடு, இந்த சமநிலையற்ற, சனநாயகத்துக்கு முரணான தன்மையை எதிர்த்து உரிய நீதிமன்றத்தை நாடுவது எனவும் இப்பொதுக்குழு முடிவெடுத்துள்ளது.

தீர்மானம்-4
தமிழர் இன வரலாற்றில் ஒருபோதும் திராவிட, இந்தியத்தேசியக் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு இல்லை என்ற நிலைப்பாட்டோடு தனித்துத் தேர்தலை எதிர்கொள்ள இன எழுச்சி அரசியல் பெரும்பயணத்தை நாம் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ‘பணநாயகத்தை வீழ்த்தி சனநாயகம் காப்போம்’, ‘எமது அதிகாரம் மக்களுக்கானது’. ஊழல், இலஞ்சம், பசி, பட்டினி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பண்பாட்டு சீரழிவு, பெண்ணடிமை, மொழிச் சிதைவு, சாதிய இழிவு, தீண்டாமை, சுரண்டல், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது, வர்க்க வேறுபாடு இவைகள் எதுவுமற்ற முழுமையான உண்மையான, நேர்மையான மக்களாட்சி அமைக்க, நிலவளம், நீர்வளம், காட்டு வளம், மலை வளம், கடல் வளம், கனிம வளம் காக்க, கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக பொதுமையில் வைக்க, தாய்மொழி கல்வி போற்ற, பொருளாதார, அரசியல், சமூக நீதி ஆகியவற்றைக் காத்திட, மாற்று அரசியலை முன்வைத்து, ‘மக்களிலிருந்து நாங்கள் மக்களுக்காகவே நாங்கள்’. ‘இந்த மண்ணை, மக்களைக் காக்க வானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை! உங்கள் வயிற்றிலிருந்து வந்த பிள்ளைகள்’ என்பதனை உணர்ந்த எமது மக்களைச் சந்திக்க வருகிற ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் இன எழுச்சி அரசியல் பெரும்பயணத்தை லட்சிய உறுதியோடு தொடங்கிறோம் என்பதை இப்பொதுக்குழு பெருமையுடன் அறிவிக்கிறது. ‘2016-இல் உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு’ என்ற உயரிய நோக்கத்தோடு நாம் தமிழர் கட்சி வருகிற சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்கிறது. இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி. திராவிட, இந்தியத் தேசியக் கட்சிகளுக்கோ இது மற்றுமொரு தேர்தல். மாற்றத்தை எதிர்நோக்கி படைதிரட்டி நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கோ இது போர்க்களம் என இந்த பொதுக்குழு பிரகடனம் செய்கிறது

அதிமுக வோடு கூட்டணி இல்லை என்று சொன்னதால் சீமான் மீது வழக்குப் போடுவதா? பெ.மணியரசன் கண்டனம்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீதும்
40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கு,
அ.இ.அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார், அவருடைய அறிக்கையில்…..

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் மீதும், மற்றும் அக்கட்சித் தோழர்கள் 40 பேர் மீதும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில், இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 124A, 143, 153A, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

கடந்த மே 24 அன்று, திருச்சியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாட்டில் அவர்கள் பேசியதற்காக, இவ்வழக்கு போடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த சனநாயக விரோத நடவடிக்கைக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மைக்காலமாக அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழின உணர்வாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் முடிவெடுத்து, வரிசையாக இவ்வாறு வழக்குகளை போட்டு வருகிறது. ஆர்ப்பாட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுத்து வருகிறது.

செண்பகவல்லி அணைக் கோரிக்கைக்காக, 31.05.2015 அன்று திருநெல்வேலி மாவட்டம் – வாசுதேவநல்லூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கடைசி நேரத்தில், 30.05.2015 அன்று மாலை 4 மணிக்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன், திருச்சி – திருவெறும்பூரில், 06.05.2015 அன்று நடைபெறவிருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தில் 20 தமிழர்களைக் கடத்தி சுட்டுக் கொன்றதற்கு கண்டனச் சுவரொட்டி போட்டதற்காக, இ.த.ச. 153A, TNOPPD (3) பிரிவுகளின்படி, என் மீதும், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் மீதும் வழக்குப் பதிவு செய்து, தோழர் கவித்துவனை சிறையில் அடைத்தார்கள்.

இப்பொழுது, நாம் தமிழர் கட்சி மாநாட்டில் பேசியதற்காக அக்கட்சி நிறுவனர் மீதும், மற்ற பொறுப்பாளர்கள் மீதும் கடுமையான பிணை மறுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

தோழர் சீமான் பல ஆண்டுகளாக தமிழீழம் சார்ந்தும், தமிழகம் சார்ந்தும் இன உரிமைகள் குறித்து பேசி வரும் பேச்சைத்தான் திருச்சி மாநாட்டிலும் பேசியுள்ளார். அப்பொழுதெல்லாம், அ.இ.அ.தி.மு.க. அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.இ.அ.தி.மு.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவைப் பெற்று, அதன் தேர்தல் பரப்பரைக்கு தோழர் சீமானின் சொற்பொழிவை பயன்படுத்திக் கொண்டது.

திருச்சி மாநாட்டில், அவர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வோடும் அ.இ.அ.தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இப்பொழுது இவ்வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அரசுக்கு எதிராக பகையுணர்ச்சியைத் தூண்டக் கூடிய பேச்சு என்று குற்றம்சாட்டி 124A பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை (AIADMK Government) விமர்சிப்பதை அரசைக் (State) கவிழ்க்கக் கூடிய நோக்கம் கொண்டதாகக் கருத முடியாது. ஆட்சி குறித்த விமர்சனங்களையெல்லாம் 124A-வாகக் கருதினால் கருத்துரிமை என்பது கடுகளவும் இருக்காது.

வெள்ளைக்காரன் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலனிய ஆதிக்கத்திற்கு உகந்த எதேச்சாதிகாரப் பிரிவான 124A பிரிவை, விடுதலை பெற்ற இந்தியாவில், தண்டனைச் சட்டத்தில் வைத்திருப்பதே இந்திய அரசமைப்புச் சட்ட விதி 19க்கு நேர் எதிரானதாகும். அது நீக்கப்பட வேண்டிய பிரிவு! அந்தப் பிரிவைப் பயன்படுத்தி, அ.இ.அ.தி.மு.க. அரசு தோழர் சீமான் மீதும் மற்ற தோழர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்திருப்பது சனநாயக விரோதச் செயலாகும்; பழிவாங்கும் நோக்கம் கொண்டதாகும்.

124A பிரிவைப் போலவே, 153A பிரிவும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. வர்ண சாதி ஆதிக்கத்தை பற்றியும், பறிபோகும் தமிழர்கள் உரிமைகள் குறித்தும் பேசினால் கூட, பழிவாங்குவதற்காக இந்த 153A-வை பயன்படுத்த முடியும். ஏனெனில், பல்வேறு மொழி, இன, மத, சமூக மக்களிடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி இந்த 153A பிரிவின் கீழ் வழக்குப் போட முடியும்.
ஒருவர் மத – இன மோதல்களை உண்டாக்கும் வகையில் உண்மையிலேயே ஒருவர் நடந்து கொண்டிருந்தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 505(2) இருக்கிறது. எனவே, இந்த 153A என்பது அரசியலில் தங்களுக்கு ஆகாதவர்களைப் பழிவாங்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
காவல்துறை அனுமதியோடு அமைதியாக நடந்து முடிந்த மாநாடு குறித்து, சட்ட விரோதமாகக் கூடியக் கூட்டம் என்றும் அரசு அதிகாரிகளின் ஆணைக்குக் கட்டுப்படாத நடவடிக்கை என்றும் (143, 188) போட்டிருப்பதும் போலிக் குற்றச்சாட்டுகளே!
அ.இ.அ.தி.மு.க. அரசு அண்மைக்காலமாக தமிழின உணர்வாளர்களை தமிழ்த் தேசிய அமைப்புகளை பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் போடுவது, நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஆகிய சனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் மீதும் மற்றுமுள்ள 40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கைக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு பிரபாகரன் தேவைப்பட்டார், இப்போது தேவையில்லையா? – சீமான் காட்டம்.


கருணாநிதியை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயலலிதாவை சீமான் விமர்சிப்பதில்லை என்று தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் பிரபல வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தேர்தல் நேரத்தில் தேவைப்பட்ட பிரபாகரன் இப்போது தேவையில்லாமல் போய்விட்டாரா? என்று காட்டமாகக் கேட்டிருக்கிறார் சீமான். இது தொடர்பாக அவர் சொன்ன பதில் ….
”வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது ஈழ அரசியல். ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, ‘நாம் தமிழர்’ கட்சியை உருவாக்கினோம். சில காலமாகவே முதல் மாநாட்டுக்கான வேலைகளைத் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். மாநாட்டுக்கு ஏக அரசுக் கெடுபிடிகள். கடைசி நேரத்தில் தலைவர் பிரபாகரனின் படங்களை அப்புறப்படுத்தினார்கள். இதே பிரபாகரனின் படத்தின் கீழ் நின்று வாக்குகள் கேட்டபோது, அதை வரவேற்றது அ.தி.மு.க அரசு. அன்றைக்குத் தேவைப்பட்ட பிரபாகரன், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படவில்லை. அவை அனைத்தையும் சமாளித்துச் சாகசம் நிகழ்த்தியிருக்கிறார்கள் எங்கள் பிள்ளைகள். லட்சம் இளைஞர்கள் திருச்சியில் திரள, பிரபாகரன் என்ற பெருநெருப்பே காரணம்.”

இறந்த உடலம் புலிகளின் தலைவர் அல்ல…! காலம் கடந்து வெடித்தது உண்மை.

புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் ….இதை பல பேர் நம்புனாலும்,சிலர் நம்பல……இருக்கார் னு நிறைய ஆதாரங்களை சொன்னாலும்….இந்த விசயம் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்….
முதல் படம் பிரபாகரனின் உடல்னு சிங்கள இராணுவம் காட்டிய உடல்….இதுல மேல் பற்களுக்கு இடையில இடைவெளி இருக்கும்….
இரண்டாவது படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட தலைவரோட படம் ….இதுல பற்களுக்கு இடைல இடைவெளி இருக்காது ….
மூன்றாவது படத்துலயும் இடைவெளி இருக்காது….
தலைவர் சின்ன வயசுல வெடிவிபத்துல கால்ல காயம்பட்டு கால் கருத்துப்போனதால “கரிகாலன்” னு பேரு வந்துச்சு அந்த கருப்பான கால் எங்க…? இந்த படத்துல அதெல்லாம் ஒன்னும் இல்ல….
மிக நீண்ட நாள் ஆய்வில் கிடைத்த தகவல் இதை சிலர் வியப்பாக பார்க்கலாம் விடுதலைப் புலிகளின் தலைவரின் அருகிருந்த முக்கிய போராளி ஒருவரின் வாய் முறைப்பாடு காரணம் இறந்தால் என்பதற்கு அப்பால் உடற் கூற்று அங்க அடையாள ஆய்வுகள் சான்றாயின
விடுதலைப் புலிகளன் தலைவரின் உடற் கட்டமைப்பை ஒத்த ஒரு இராணுவச் சிப்பாய் இராணுவத்தில் இருந்ததை பல இராணுவ வீரர்கள் அறிவார்கள் அவர்களுக்கு இதில் இறந்துள்ளது யார் எனப் புரியும்
சிங்களவர்கள் இறந்துவிட்டார்கள் எனக் கூறுவதற்கு முன்பு பல தமிழர்கள் இறந்துவிட்டார் என்றனர் மிகவும் சிக்கலான வினா, ஒன்று மட்டும் உண்மை இதில் உள்ள உடலம் விடுதலைப் புலிகளின் தலைவருடையது அல்ல என பெயர் குறிப்பிட விரும்பாத விடுதலைப் புலிகளின் மூத்த போராளி உறுதிப் படுத்தினார் நீண்ட நாள் வினாவிற்கு ஒரு செய்தி.
இவ் விடயத்தை கருணா மற்றும் தயா மாஸ்ரர் நன்கறிவர் அத்துடன் உடலைப் பார்த்த பின் கருணா கூறிய கூற்றுக்களும் அப்படி அமைந்தது.




13 Jun 2015

சிங்கள அரசுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்.



ஏற்கெனவே சென்னையில் எடுத்த படம்.

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வலியுறுத்தி, பொதுமக்களிடம் 10 லட்சம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது.

  தெற்காசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மைய உறுப்பினர் சரஸ்வதி தலைமை வகித்துப் பேசியதாவது:
  இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 70 ஆயிரம் தமிழர்கள் உள்நாட்டுப் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம், அங்குள்ள தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை.
  இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் சூழல் மாறவில்லை. தற்போது, அங்கு பதவியில் உள்ளோர் பலரும் உள்நாட்டுப் போரில் தொடர்புள்ளவர்கள் தான்.
  அங்குள்ள தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்காக, இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இதற்கு, ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும். தமிழகத்தில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் 10 லட்சம் கையெழுத்துகள் பெற திட்டமிட்டுள்ளோம். இந்த கையெழுத்துப் பிரதிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
         இதில், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மதுரைக் கல்லூரி முதல்வர் முரளி, மதுரை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.கே. ராமசாமி, திரைப்பட இயக்குநர் வீரசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

11 Jun 2015

சீமான் -உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம்.


வேலூர் சிறைச்சாலை நீண்ட வரலாறுகளை கொண்டது. அதன் நெடிய சுவர்கள் பழம் பெருமை உடையன. ஆனால் எம்மைப் போன்றவர்களுக்கு அச்சிறை நெருக்கடிகளையும்,சோதனைகளையும் தந்தாலும், நெஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் நினைவுகளையும், உயிராய் உடனிருக்கும் உறவுகளையும் தந்த இடமாகும். ஆம். அங்குதான் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அண்ணன் சீமான் அவர்கள் இருந்த போது அவரை பார்க்க வந்த தம்பி மணி செந்திலை சந்தித்தேன். பார்ப்பதற்கு மிக எளிமையாக, அமைதியாக இருந்தாலும் அவனிடம் இனம் காக்க போராடும் மன உறுதியும்,உண்மையான தமிழுணர்வும் தென்பட்டன. தம்பி மணி செந்தில் மிகுந்த அன்புடையவன். பழகியவர்களுக்கு தெரியும். அவனை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது. பார்த்த முதல் பார்வையிலேயே அவனும் ,நானும் நெருக்கமான அண்ணன்,தம்பிகளாகி விட்டோம்.
அண்ணன் சீமான் சிறையில் இருந்த காலக்கட்டத்தில் தம்பி மணி செந்தில் எழுதிய கட்டுரைகளை உற்சாகமாக பாராட்டி விட்டு எங்களுக்கும் படிக்கத்தருவார். அவனது கருத்தாழம் மிக்க எழுத்துக்களை கண்ட போது எனது வாழ்க்கையை,என் வலிகளை தம்பி மணி செந்தில் மூலமாகத்தான் பதிவு செய்திட வேண்டும் என முடிவெடுத்தேன். அப்படியாக பிறந்ததுதான் எனது வாழ்க்கை பதிவான “விடுதலைக்கு விலங்கு “
எமது வழக்கில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், நான் அனுபவித்த கடும் சித்ரவதைகளையும், என் வாழ்க்கையின் ரத்தம் தோய்ந்த பக்கங்களையும் தம்பி மணி செந்திலிடம் நான் விவரித்தேன், கண்கலங்கிக் கேட்டுக் கொண்டிருந்த அவன் காரியத்தில் இறங்கினான். நான் விவரித்ததை ரத்தமும்,சதையுமாக தன் எழுத்தில் வந்து நிறுத்தி என்னோடு ஒருவனாய் கலந்தான் தம்பி மணிசெந்தில்.
யாராவது விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை படித்து விட்டு இவ்வளவு சிரமப்பட்டீர்களா என கேட்கும் போது எனது வலிகளை,துயரங்களை அப்படியே எழுத்தில் வடித்த தம்பி மணிசெந்திலின் எழுத்தாற்றலை வியந்துக்கொள்வேன்.
அவனின் எழுத்து நடையும், சொற்களை கையாளும் திறனும், மிகவும் நேர்த்தியானவை. என்னை அவனாக உணர்ந்து,என் வலிகளை,துயரங்களை அப்படியே தன் ஆழ் மனதில் உள்வாங்கி , மணி செந்தில் இராபர்ட் பயஸ் ஆகவே மாறி விடுதலைக்கு விலங்கினை தம்பி மணி செந்தில் எழுதினான்.
நாம் தமிழர் கட்சி நடத்த உள்ள சர்வதேச இன எழுச்சி அரசியல் மாநாட்டு வெளியீடாக வெளியாகி உள்ள சீமான் –உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம் என்கிற இக்கட்டுரை தொகுதி அண்ணன் சீமான் அவர்களைப் பற்றியும், நாம் தமிழர் கட்சியினைப் பற்றியும் தம்பி மணி செந்தில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுதியாக வெளிவருகிறது.
அண்ணன் சீமான் பற்றி நான் விவரித்தால் நான் ஒரு புத்தகம் தனியே எழுத வேண்டும். எப்போதும் தமிழின நலனிற்காக முன்கள வீரராக களத்தில் நிற்கும் அண்ணன் சீமான் எம் அன்பிற்குரியவர். அவர் வேலூர் சிறைக்கு வந்து விடுதலையான பின்புதான் எங்களின் வேதனைகளையும்,துயர்க் கதைகளையும் உலகம் அறிந்தது. அவ்வகையில் நாங்கள் அவருக்கு கடன் பட்டவர்கள்.
அண்ணன் சீமான் அவர்களும், அண்ணி கயல்விழி அவர்களும் என் மீது காட்டும் பேரன்பு விலை மதிப்பில்லாதது.. அண்ணனைப் போலவே அண்ணியும் என் மீது பற்றும், அக்கறையும் கொண்டு இருப்பது எனக்கு மிகுந்த ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.
அண்ணன் சீமான் அவர்களின் இனம் சார்ந்த போராட்டங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
அவருக்கு துணையாக நிற்கிற தம்பி மணி செந்தில் உள்ளீட்ட நாம் தமிழர் கட்சியினை சார்ந்த அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள்.
நூல் வெல்லட்டும்.
-இராபர்ட் பயஸ்
த.கை.எண் 4552
நடுவண் சிறை,புழல்
சென்னை.

10 Jun 2015

மியன்மார் முஸ்லிம்களுக்காக முஸ்லிம் கட்சிகள் செய்யாத ஒன்றை நாம் தமிழர் கட்சி செய்வது நன்றிக்குரியது….முபாரக் மவ்லவி


(எஸ்.அஷ்ரப்கான்)

பௌத்த பயங்கரவாதிகளால் மிக மோசமாக
துன்புறுத்தப்படும் மியன்மார் முஸ்லிம்களுக்காக
இந்தியாவின் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தை
உலமா கட்சி வரவேற்றுள்ளதுடன் இலங்கையின்
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்
கட்சிகள் செய்யாத ஒன்றை நாம் தமிழர் கட்சி
செய்வது நன்றிக்குரியது என உலமா
கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தெரிவித்துள்ளார். இது பற்றி அவர்
தெரிவித்துள்ளதாவது,

பயங்கரவாதமம் என்பது மதங்களை அடிப்படையாக
கொண்டிருந்தாலும் சரி, சித்தாந்தங்களை அடிப்படையாக
கொண்டிருந்தாலும் சரிவை அது துடைத்தெறியப்பட
வேண்டும். ஆயுத போராட்டம் என்பது ஆயுதம்
தூக்கியோருக்கெதிராக இருக்க வேண்டுமே தவிர அப்பாவி
பொது மக்களுக்கெதிராக அல்ல. இதனை புரிந்து
கொள்ளாமையே விடுதலைப்புலிகளின் படு தோல்விக்கும்,
மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கும் காரணமாக
அமைந்தது. இவ்வாறானதொரு பயங்கரவாதமே
மியன்மார் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது.

மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக
உலகமெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டன. ஆனால் இலங்கை
பாராளுமன்றத்தில் அங்கம் வகித்துக்கொண்டு
அமைச்சர்களாக வலம் வந்து முஸ்லிம்களை
ஏய்த்துப் பிழைக்கும் முஸ்லிம் கட்சிகள் இந்த
நாட்டில் ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தைக்கூட ஏற்பாடு
செய்யவில்லை. யாரோ சிலர் ஏற்பாடு செய்த
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ரிசாத் முட்டையிட்டார்.
அமைச்சர் ஹக்கீமோ இன்னமும் தூக்கத்திலேயே வாய்
புலம்பிக்கொண்டிருக்கிறார். பேருவல சம்பவத்தின்
போதும் இவ்வாறுதான் இவர்கள் இருந்ததோடு
வாய்ப்பேச்சில் வீரனாக மட்டுமே தம்மை
காட்டிக்கொண்டனர். கிழக்கு மக்கள் தாமாகவே
இவற்றுக்கெதிராக ஹர்த்தால் நடத்தினர்.
அத்தகைய கிழக்கு மக்கள் இந்த சுயநல
முஸ்லிம் தலைமைகளுக்கெதிராக கொதித்தெழ வேண்டும்.
இந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் மியான்மார்
முஸ்லிம்களுக்கான அக்கறைக்காக உலமா கட்சி
தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

தலைவர் பிரபாகரன் சிலையை மீண்டும் அதேஇடத்தில் நிறுவுவோம்: சீமான் சீற்றம்

நாகப்பட்டினம் மாவட்டம் பொய்கைநல்லூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: 
நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கை நல்லூர் ஐயனார் கோயில் வளாகத்தில் மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சிலையை நிறுவி வீரத்தின் அடையாளமாக வழிபட்டிருக்கிறார்கள். 
தமிழ் உணர்வாலும் தலைவர் மீது கொண்ட பற்றாலும் தன்னுடைய சொந்த நிலத்தில் ஒருவர் நிறுவியிருந்த சிலையைக் காவல் துறையினர் அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். 
குல தெய்வம் ஐயனார் இன தெய்வம் பிரபாகரன் என எண்ணியே தலைவர் பிரபாகரனுக்கு அங்கே சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 
இதை அப்புறப்படுத்த காவல் துறைக்கு எந்த விதத்திலும் உரிமை கிடையாது. 
தமிழ்த் தேசிய இனத்தின் வீரமிகு அடையாளமாக, வரலாற்று வடிவமாக, காலம் தந்த கம்பீரமாக மேதகு தலைவர் பிரபாகரனை மனதில் ஏந்தி நிற்கும் தமிழ்ப் பிள்ளைகள் தங்களின் உடல் சதையில் அவருடைய உருவத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள். 
உள்ளத்தில் மட்டும் அல்லாது தங்கள் இல்லத்திலும் வரவேற்பு அறையில் புகைப்படங்களாக மாட்டி வைத்திருக்கிறார்கள். 
பார்க்கிற போதெல்லாம் வீர உணர்வு கொள்ள அலைபேசி முகப்பிலும் முகநூல் உள்ளிட்ட இணையப் பக்கங்களிலும் தலைவர் பிரபாகரன் படத்தை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். 
இல்லத்து நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களிலும் சுவரொட்டிகளிலும் பதாகைகளிலும் தலைவர் படத்தைப் பிரசுரித்து உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். 
நிலத்தில் நிறுவப்பட்டிருந்த தலைவரின் சிலையை அகற்றியவர்களால் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனத்தில் நிறுவப்பட்டிருக்கும் எண்ணத்தை என்ன செய்ய முடியும்? 
தலைவர் பிரபாகரனின் படத்தை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் எதனால் உருவானது? 
யாருக்கும் தொந்தரவாக இல்லாமல், தன்னுடைய சொந்த நிலத்தில் ஒருவர் உருவாக்கிய தலைவரின் சிலையால் என்ன சட்டம் ஒழுங்கு சிக்கல் வந்தது? 
காவல்துறை பெரிய படையாகக் கிளம்பிப்போய் தலைவர் பிரபாகரனின் சிலையைப் பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்த நிர்ப்பந்தித்தது யார்? 
எவ்விதக் காரணமும் இல்லாமல் தலைவர் பிரபாகரனின் சிலையை அகற்றியிருப்பது ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளின் உணர்வுகளையும் ஊனமாக்கும் செயல். 
சாதி மதங்களாகப் பிளந்து, தாழ்வு மனப்பான்மையால் ‘நம்மால் எதுவும் முடியாது’ என முடங்கிப்போய் தாழ்ந்து கிடந்த தமிழ் மக்களின் இழிநிலையை மாற்றி நம்மால்தான் முடியும் என்கிற போர்க் குணத்தையும் தமிழுணர்வையும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் ஊட்டி, நெஞ்சுரத்தோடு நிமிர வைத்தவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். 
அவர் வழி பரவும் உணர்வுகள் ஒருமித்த எழுச்சியாகக் கிளம்பிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய ஒடுக்குதல் நடவடிக்கைகளை அரசுத் தரப்பு பாய்ச்சி வருகிறது. 
தமிழ்ப் பிள்ளைகளின் பேச்சுக்கும் செயலுக்கும்தான் தடைபோட முடியும். ஆனால், அவர்களின் சிந்தனைக்கும் கனவுக்கும் தடை போட இந்த அரசால் எப்படி முடியும்? 
உச்சபட்ச போர்க் கொடூரமாக வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரன் வசித்த வீட்டை இடித்த சிங்கள அதிகாரிகளுக்கும் பிரபாகரனின் சிலையைப் பெயர்த்தெடுத்த தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. 
ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு தலைவர் பிரபாகரன் சிலையை நிறுவிய இடத்திலேயே மறுபடியும் வைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல், அதே இடத்தில் தலைவர் பிரபாகரனின் சிலையை நாம் தமிழர் கட்சியே மறுபடியும் நிறுவும் என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறோம்
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.

தீமோர் தீவில் தவிக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்- சீமான்

இந்தோனேசியா அருகே தீமோர் தீவில் தவிக்கும் 54 ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் இருந்து கிளம்பிய 54 தமிழர்கள் இந்தோனேசியாவுக்கு வந்திருக்கிறார்கள். அங்கேயும் வாழப் பிடிமானம் இல்லாது போனதால் அங்கிருந்து நியூசிலாந்துக்குக் கடல் வழியாக கிளம்பி இருக்கிறார்கள். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இருக்கிறார்களே என்றுகூட எண்ணாமல், அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள். அவர்களின் படகுகளை பறித்துக்கொண்டு சுங்கத்துறை படகுக்கு ஏதிலிகளை மாற்றி இருக்கிறார்கள். 

இந்தோனேசியாவில் உள்ள தீமோர் தீவில் படகு ஒதுங்க, இப்போது எந்த வசதியும் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். தீமோர் தீவில் தவிக்கும் ஏதிலிகளைக் காப்பாற்ற உலகத்தின் ஜனநாயக சக்திகள் உடனடியாகக் குரல் கொடுக்க வேண்டும். இந்தோனேசிய அரசு அவர்களின் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். எண்ணியபடியே அவர்கள் நியூசிலாந்து செல்ல இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் மனசாட்சியோடு முயற்சி எடுக்க வேண்டும். 

தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசின் மூலமாகத் தமிழக அரசும் முயற்சி எடுக்க வேண்டும். நாடோடிகளாக அலையும் ஏதிலிகளின் விடிவுக்கு உலக சமூகம் உடனடியாக ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

30 May 2015

நாம் தமிழர் கட்சி அரசியல் இன எழுச்சி மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்..

நாம் தமிழர் கட்சி அரசியல் இன எழுச்சி மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
1. நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமை கொண்ட தேசியத் தமிழினம் பல்வேறு பண்பாட்டுப் படையெடுப்புகளாலும் சீரழிவுகளாலும் சிதைக்கப்பட்டுவிட்டது. பன்னாட்டு ஆதிக்கத்தின் கீழ் எல்லாவிதச் சீரழிவுகளுக்கும் ஆளான தமிழினத்தை சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்குப் பிறகு இனம் சார்ந்த மக்கள் ஆளாத நிலையே நீடிக்கிறது. இமயம் வரை பரவிக் கிடந்த மூன்றாவது பெரும் வல்லரசான தமிழினம் ஒடுக்கப்பட்டும் அடக்கப்பட்டும் இன்றைக்கு ஓர் ஓரத்தில் முடங்கிவிட்டது. கலைச் சிதைவு, மொழிச் சிதைவு, இனச் சிதைவு என இன்றளவும் தமிழ்த் தேசிய சீரழிவுகள் நீடித்த வண்ணமே இருக்கின்றன. ஈழத்தில் கண் முன்னே நிகழ்ந்த பேரவலக் கொடுமைகளைக் கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் தாழ்நிலைக்குத் தமிழினம் தள்ளப்பட்டதற்குக் காரணமே, அதிகாரம் பெற்ற பிள்ளைகளாகத் தமிழர்கள் இல்லாததால்தான். இனம் சார்ந்த பிள்ளையின் வழிநடத்துதல் இருந்திருந்தால் இத்தகைய பேரவலத்துக்குத் தமிழினம் தள்ளப்பட்டிருக்காது. அதிகாரத்தைப் பெறுவதற்கான அரசியலை உருவாக்குவதே காலத்தின் கட்டாயமாகத் தமிழர் தோள்களில் தள்ளப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்கள் மாறுகிறார்கள்; ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால், நமக்கான அரசியல் மாற்றம் நிகழவில்லை. அரசியல் மாற்றமே அவசிய மாற்ற‌ம். புரட்சி ஒன்றால்தான் இத்தகைய மாற்றத்தைப் புரட்டிப் போட முடியும். ‘அதிகாரம் மக்களுக்கானது’ என்கிற உரிமைக் குரலோடு மாற்று அரசியலைக் கட்டி எழுப்ப தமிழர்கள் ஒவ்வொருவரும் கைகோர்க்க வேண்டும். ஊழலற்ற லஞ்சமற்ற முழுமையான மக்கள் ஆட்சியை உருவாக்க இதுவே நமக்கான இறுதி வாய்ப்பு. இருக்கும் உரிமையைக் காக்கவும் இழந்த உரிமையை மீட்கவும் ஒருமித்த தமிழர் திரட்சியே புரட்சியாக மாறும். நாமே மாற்று; நாம் தமிழரே மாற்று. நமக்கான அதிகாரத்தை இனியும் எவரும் தடுத்து வைக்க முடியாது. சாதி மதக் கூறுகளை உடைத்து, தேசிய, திராவிட மாயைகளை மண்ணோடு மண்ணாக்கி, ‘நாம் தமிழர்’ என்கிற இன உணர்வோடும் மான உணர்வோடும் திரண்டு, ‘ஒரு தமிழன் தலைமையில் ஆட்சி’ அமைய, நாம் அனைவரும் போராட வேண்டும். சுதந்திரப் போராட்டத்துக்கான அற்பணிப்போடும், எது பகல், எது இரவெனத் தெரியாத அயராத வேகத்தோடும் ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் இந்தப் புரட்சிக்காகத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
2. தனியீழம் மட்டுமே ஒவ்வொரு தமிழருக்குமான தாயக‌ விடுதலை. தமிழ்த் தேசியத்துக்கான தேச விடுதலையும் அதுவே. தமிழர் பணம், தமிழ்த் தேசிய இராணுவம், தமிழ்த் தேசிய வைப்பகம், தமிழ்த் தேசிய கீதம் என்றெல்லாம் தமிழர் அங்கீகாரத்தைப் பெற இலட்சக்கணக்கான போராளிகளும் தமிழ் மக்களும் உயிரைத் துச்சமென நினைத்துப் போராடிய போராட்டத்தை கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை கைவிட முடியாது. இன விடுதலை என்பது ஒவ்வொரு இனத்துக்கான பிறப்புரிமை. அதனை மறுக்க எவருக்கும் உரிமை இல்லை. எனவே, இலங்கையில் உடனடியாகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ”ஒரே இலங்கைக்குள் ஒற்றை ஆட்சிக்குள் வாழ்கிறீர்களா… இல்லை, தனித் தமிழீழமாக மீள்கிறீர்களா?” எனக் கேட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு இந்தியப் பெருந்தேசம் குரல் கொடுக்க வேண்டும். சிங்கள அரசின் சிநேகித அரசாக இருக்கும் பாரதீய ஜனதா அரசு, பொது வாக்கெடுப்பு கோரிக்கையைப் புறந்தள்ளினால், சர்வதேச முயற்சியாக அதனை மாற்ற நாம் தமிழர் கட்சி எல்லாவித முனைவுகளையும் எடுக்கும். சர்வதேச ஜனநாயக சக்திகளைச் சந்தித்து, போர் நடந்த காலம் தொடங்கி முகாம்களில் தவிக்கும் இன்றைய வாழ்க்கை வரையிலான‌ ஈழத்தமிழர்களின் துயரங்களை வெளிச்சமிட்டுக்காட்டி, பொது வாக்கெடுப்பைச் சாத்தியப்படுத்த அத்தனை அரசியல் முயற்சிகளையும் நாம் தமிழர் கட்சி நிச்சயம் மேற்கொள்ளும். அதேநேரம் இன அழிப்புப் போரில் வெறித்தாண்டவமாடிய சிங்கள இராணுவத்தினர் மீதும் ராஜபக்சே மீதும் நடவடிக்கை எடுக்க சர்வதேச சமூகம் இன்னும் வேகம் காட்ட வேண்டும். இன அழிப்பு ஆதாரங்களை அவ்வளவு சீக்கிரத்தில் உலகத்தின் ஜனநாயக அமைப்புகள் புறந்தள்ளிவிட முடியாது. பன்னாட்டு விசாரணைக்கும், இனவெறிக் கொடூரர்கள் மீதான நடவடிக்கைக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் உடனடியாக உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு தமிழர் உள்ளத்திலும் ஆறாத ரணமாக நீடிக்கும் கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அது தமிழர்களை வேறு திசை நோக்கியே திருப்பும் என்பதை உலகக் கண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இலட்சக்கணக்கான படுகொலைகளை மறந்துவிட்டு இயங்க, தமிழர்கள் எவராலும் முடியாது. ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளின் உள்ளக் கொதிப்பையும் உணர்ந்து, எங்கள் கண்ணீரின் பரிதவிப்பைப் புரிந்து, இயலாமையும் கையறு நிலையுமாய்த் தத்தளிக்கும் எமக்கு உரிய தீர்வை உலகம் கொடுத்தே தீர வேண்டும்.
3. இன விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை இனியும் நீட்டிக்கக்கூடாது. போர் மரபுகளை மீறி இனவெறிக் கொடூரத்தோடு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி சிங்கள இராணுவம் போரிட்ட போதும் விடுதலைப் புலிகள் எத்தகைய நெறியோடும் விடுதலைக்கான அற்பணிப்போடும் போராடினார்கள் என்பது இந்த உலகுக்கே விளங்கிய உண்மை. ‘விடுதலைப் புலிகளை முற்று முழுதாக அழித்துவிட்டோம்’ எனக் கடந்த ராஜபக்சே அரசும், இப்போதைய மைத்ரிபால சிறிசேனா அரசும் சொல்லிவிட்ட நிலையில், பிறகு எதற்கு புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாத அமைப்பு எனச் சொல்பவர்கள் தடையை மட்டும் இருக்கிறபடியே நீட்டிப்பது ஏன்? விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர் தேசிய இனத்துக்கான அவமானம். ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் அயல்நாடுகளுக்குப் பயணிக்கும்போது தமிழர் என்றாலே, ‘நீ புலியா, போராளியா, பயங்கரவாதியா’ எனப் பார்க்கிற பார்வையை புலிகள் மீதான தடையே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. எனவே, விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். ஈழப் பிரச்னையில் ஆரம்பத்தில் இருந்த பார்வையை மாற்றி தமிழ்த் தேசிய இன விடுதலையின் அவசியத்தையும் அதற்காகக் கொடுத்த இலட்சக்கணக்கான உயிரையும் மனதில் எண்ணி, புலிகள் மீதான தடையை நீக்க தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் உரிய சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். புலிகள் மீது தடையைப் பிறப்பிக்கச் சொன்னவரே புலிகள் மீதான தடையை ரத்து செய்யச் சொன்னால், அது ஒவ்வொரு தமிழனுக்குமான நிம்மதிப் பெருமூச்சாகவும் உலகளாவிய அளவில் தமிழர்கள் மீதான உயரிய பார்வையாகவும் அமையும். சிங்கள போர்க்குற்றங்களைக் கண்டித்தும் தனித் தமிழீழத்தை வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஒவ்வொரு தமிழர்களின் உள்ளத்திலும் உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, புலிகள் மீதான தடையை நீக்கவும் நிச்சயம் ஆவண‌ம் செய்வார் என நாம் தமிழர் கட்சி நம்புகிறது.
4. பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை, ஒரு தாயின் மடிப்பிச்சையாகக் கண்ணீரோடு கதறிக் கேட்கிறது நாம் தமிழர் கட்சி. திட்டமிட்ட சூழ்ச்சியாலும் நேர்மையற்ற விசாரணையாலும் செய்யாத குற்றத்துக்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தவிக்கும் 7 பேர் மனநிலையை அதிகாரத்தில் இருக்கும் எவருமே உணராமல் போனது உலகக்கொடுமை. இளமை தொலைத்து, கனவுகள் தொலைத்து, உறக்கமற்றவர்களாக, உலகம் பார்க்காதவர்களாகப் பரிதவிக்கும் ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்க மத்திய மாநில அரசுகள் மனசாட்சியோடு ஆவணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் மீதும் தூக்கு குறித்த துயரம் பரப்பப்படுவதும், ஒட்டுமொத்த தமிழர்களையும் அது வேதனையில் ஆழ்த்துவதும், கையறு நிலையில் கதற வைப்புதும் இன்னும் எத்தனை காலத்துக்கு நீடித்துக்கொண்டே போகும்? தூக்கின் துரத்தலில் அல்லாடும் பிள்ளைகளின் ஆற்றொணா வேதனையை தாய் அற்புதத்தம்மாளின் மனநிலையில் இருந்து மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும். சாலையோரம் தூங்கிய ஏழையை மதுபோதையில் வாகனம் ஏற்றிக் கொன்ற ஒரு நடிகர் நீதிமன்ற தண்டனை அறிவிப்புக்குப் பின்னரும் ஒரு நிமிடம்கூட சிறை தண்டனையை அனுபவிக்காமல் சர்வ சுதந்திரத்தோடு வெளியே வர வகை செய்திருக்கும் இந்தியாவின் சட்ட திட்டங்கள் ஒரு மின்கலம் வாங்கிக் கொடுத்ததாக குற்றம் சொல்லி 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளனை அடைத்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? ஏழு பேர் விடுதலைக்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு தாயுள்ளத்தோடு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஒரு மாநில அரசுக்கான அதிகார வரம்பு உணர்ந்து அதற்கான மறுப்பையோ திணிப்பையோ செய்யாமல் ஏழு பேர் விடுதலைக்கு மத்திய அரசு பக்க துணையாக விளங்க வேண்டும்.
5. செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லி அப்பாவித் தமிழர்கள் 20 பேரைச் சுட்டுக்கொன்று வெறித்தாண்டவம் ஆடிய ஆந்திர அதிகாரிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவது, உரிய நியாயத்துக்காகப் போராடும் ஒவ்வொரு தமிழர்களையும் கொல்வதற்குச் சமமான கொடூரம். ஆந்திரா நிகழ்த்திய கொடூரத்தை வெறும் மரக்கடத்தல் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய இறையாண்மையை கூறுபோடத்தக்க கொடூரத்தை சர்வசாதாரணமாக நிகழ்த்தி இருக்கிறார்கள் ஆந்திர அதிகாரிகள். பேருந்தில் பயணித்தவர்களைப் பிடித்துச் சென்று கொன்றதற்கான ஆதாரங்களை நூலிழையில் தப்பிய தமிழர்கள் பட்டவர்த்தனப்படுத்தியும் ஆந்திர அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இறையாண்மையை மீறும் திமிர்த்தனமாகவே தெரிகிறது. ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் உடனடியாக அவர் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு குற்ற வழக்கை முடித்த பின்னரே பதவியில் தொடர முடியும். ஆனால், ‘அப்பட்டமான படுகொலைகள்’ எனச் சொல்லி இத்தனை புகார்கள் எழுந்தும் ஆந்திர அதிகாரிகள் ஒருவர் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் தாமதிக்காமல் அப்பாவித் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதை நியாயமான மனித உரிமைக் குழுக்களை வைத்து விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
6. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்தையே முடக்கிப்போடும் அளவுக்கு நதிநீர்ப் பிரச்னையில் நாளுக்கு நாள் நடக்கும் திட்டமிட்ட சதிகளையும், உரிமை மீறல்களையும் இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. முல்லைப் பெரியாறு மற்றும் காவிரிக்குக் குறுக்கே அணை கட்டப்படும் அடாவடிகளை மத்திய அரசு உடனடியாகத் தட்டிக்கேட்டுத் தடுக்க வேண்டும். நீதிமன்றங்களே மிகத் தெளிவாகச் சொன்ன பிறகும், தண்ணீர் பிரச்னையில் தமிழ்நாட்டுக்கான அக்கிரமங்கள் தொடர்வது தமிழர்களைத் திட்டமிட்டுச் சீண்டிப்பார்க்கிற செயல். காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் அக்கம்பக்க மாநிலங்களின் அத்துமீறல்களும், மத்திய அரசின் மௌனச்சாமி அணுகுமுறையும் இனியும் நீடிக்குமேயானால், மிகக் கடுமையான போராட்டங்களை நாம் தமிழர் கட்சி கையிலெடுக்கும். வறட்சியாலும் அநியாய விலை ஏற்றங்களாலும் நெல், கரும்பு மற்றும் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பேரவலம் தமிழகத்திலும் தொடங்கியுள்ள நிலையில், நீர் ஆதாரப் பிரச்னைகளும் நீடித்துக்கொண்டே போனால் அது விவசாயிகளின் உயிரோடு விளையாடுகிற விபரீதமாகவே இருக்கும். எனவே மேகதாது உள்ளிட்ட அணைகளைக் கட்டும் முயற்சிகளைத் தடுத்து தமிழக விவசாயிகளைக் காக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. தமிழகத்தில் மீத்தேன் எரிகாற்று எடுக்க இருப்பதைக் கண்டித்து ஒட்டுமொத்த விவசாயிகளும் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். சமீபத்தில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். தமிழகத்தில் மீத்தேன் எடுக்க உரிமம் எடுத்த கிரேட் ஈஸ் டர்ன் எனர்ஜி நிறுவனம் மீத்தேன் எடுப்பதற்கான குறைந்தபட்ச பணியைக்கூட அங்கு தொடரவில்லை என்றும், மத்திய அரசு கேட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் சொல்லி அதனாலேயே அந்த நிறுவனம் மீத்தேன் எடுப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் காரணங்களைச் சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே மீத்தேன் பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இன்னமும் தீவிரத்தோடுதான் இருக்கிறது என்பது பட்டவர்த்தனமாகிறது. இலட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டங்களையோ கட்சி பாகுபாடற்ற கொந்தளிப்புகளையோ கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் கிரேட் ஈஸ் டர்ன் எனர்ஜி நிறுவனத்தின் நடவடிக்கைகளை மட்டுமே மனதில் கொண்டு மீத்தேன் எடுக்கும் உரிமத்தை ரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர். 766 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விவசாய மண்ணைக் காவு வாங்கக் காத்திருக்கும் மீத்தேன் எரிகாற்று திட்டம் விவசாய மாவட்டங்களையே சுடுகாடாக மாற்றிவிடக்கூடியது. தனியார் நிறுவனத்தின் உரிமத்தை மட்டுமே ரத்து செய்யவிருக்கும் நிலையில், மீத்தேன் திட்டமே ரத்தானதைப் போல் போலி பிம்பத்தை தமிழகத்தில் சிலர் உருவாக்கி வருகிறார்கள். மீத்தேன் அரக்கனை வேரறுக்க நெஞ்சுறுதியோடு நிற்கிற விவசாயப் பெருமக்களின் உணர்வுகளைச் சிதைப்பதற்கான முயற்சியாகவே இதனைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. கிரேட் ஈஸ் டர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு மாற்றாக வேறு நிறுவனத்தைக் கொண்டுவந்து, அதற்கு உரிமம் வழங்கி மீத்தேன் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக வரும் பேரச்சமான செய்திகளை அவ்வளவு சீக்கிரத்தில் புறந்தள்ளிவிட முடியாது. மீத்தேன் எரிகாற்றுத் திட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் கிளம்பும் எதிர்ப்புகளைப் பார்த்துச் சுதாரித்துக்கொண்ட அரசுத்தரப்பு, இப்போது ‘சாதாரண பெட்ரோல் -கேஸ் பரிசோதனைகளைத்தான் நடத்துகிறோம்’ எனச் சொல்லி, மத்திய அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி மூலமாக மீத்தேன் எடுக்கும் செயல்பாடுகளை மறைமுகமாக‌ச் செய்து வருகிறது. விவசாய வாழ்வாதாரங்களையே அழிக்கக்கூடிய இத்தகைய செயல்பாடுகள் இனியும் தொடர்ந்தால், ஒருமித்த மக்கள் புரட்சியே அந்த மண்ணில் நடக்கும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறது. மீத்தேன் எரிகாற்று அபாயங்களைப் பட்டியலிட்டு தனது இறுதி மூச்சு வரை போராடிய எங்களின் பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் கனவை, நாம் தமிழர் கட்சி நிச்சயம் நிலை நிறுத்திக் காட்டும்.
8. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வாகன விபத்து என இந்த மண்ணில் நிகழும் சமூகக் குற்றங்கள் பலவற்றுக்கும் மிக முக்கியக் காரணியாக மதுவே இருக்கிறது. அரசால் விற்கப்படும் மது, அரசின் சட்டம் ஒழுங்குக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு பல கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது. குடும்பத் தகராறு, சந்தேகம், சல்லாப நோக்கம், பகைமை, பழிவாங்கல் என மக்கள் மனதில் கட்டுப்பாடற்ற எண்ணத்தை உருவாக்கி, பல குடும்பங்களின் நிம்மதியைப் பறித்துவருகிறது மது. குடிமக்களை அறிவிற்சிறந்த பெருமக்களாக்குவதே அரசின் கடமை. ஆனால், தமிழகத்தில் 4,028 நூலகங்களைத் திறந்திருக்கும் அரசு 6,800-க்கும் அதிகமான மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறது. வரும் 2015 – 16 வருடங்களில் மதுக்கடை வருமானத்தை 29,672 கோடி இலக்காக நிர்ணயித்து தமிழக அரசு செயல்படுவது வெட்கக்கேடானது. மதுவை வருமானமாகப் பார்க்காமல், அவமானமாகப் பார்த்து, மது விற்பனையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
9. மதவெறிக் கட்சியாக அறியப்பட்ட பாரதீய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சியைப் பிடித்த பிறகாவது தனது மனநிலையையும் மதநிலையையும் மாற்றிக்கொள்ளும் என ஒவ்வொரு குடிமக்களும் நினைத்தார்கள். ஆனால், ‘தீண்டும் குணம் பாம்புக்குப் போகாது’ என்பதை பாரதீய ஜனதா கட்சி அனுதினமும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. பொறுப்பேற்ற நாள் தொடங்கி இன்று வரை இந்தியாவையே இந்துத்துவா தேசமாக மாற்றிவிட எல்லாவித நடவடிக்கைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மேற்கொண்டு வருகிறது. சமஸ்கிருதத் திணிப்பு, கட்டாய மதமாற்றம், பகவத் கீதையைத் தேசிய நூலாக்கும் திட்டம், கிறிஸ்துமஸ் தின விடுமுறையை ரத்த செய்ய முயற்சி… என பாரதீய ஜனதா ஆட்சியில் அனுதினமும் அரங்கேற்றப்படும் இந்துத்துவா நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. இத்தகைய இந்துத்துவா செயல்பாடுகள் நம் மண்ணில் வாழும் இதர மதத்தினரை எப்படியெல்லாம் துன்புறுத்தும் என்பதை மத்திய அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். முன்னேற்றப் பாதையில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லப்போவதாக வாக்குறுதி வழங்கிய பிரதமர் மோடி அவர்கள், தேவையற்ற மதத் திணிப்புகளையும், மதத் துவேசங்களையும் உண்டாக்கி, கற்காலத்துக்கு இந்தியாவை இழுத்துச் செல்லும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார். பிறர் மதம் நோகும் செயல்களையும், பிறர் மனம் நோகும் செயல்களையும் செய்வதுதான் பாரதீய ஜனதா அரசின் செயல் திட்டமா? மதம் சார்ந்த முனைப்புகளும் திணிப்புகளும் தொடர்ந்தால், ஒருமித்த இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் நச்சாக அத்தகைய நடவடிக்கைகள் அமைந்துவிடாதா? எனவே, மதம் சார்ந்த நடவடிக்கைகளில் பாரதீய ஜனதா அரசு, தன் நிலைப்பாட்டை உடனடியாக‌ மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கல்விக் கொள்கைகளில் இந்துத்துவாவைத் திணிக்கும் செயல் வளரும் குழந்தைகளின் மனதிலும் நச்சை விதைக்கும் கொடு செயலாகவே இருக்கும். இந்துத்துவாவின் அடிப்படை வாதத்தைக் கல்வியில் திணித்து கல்வியைக் காவிமயமாக்க பா.ஜ.க. செய்யும் நுட்பமான நகர்வுகளை அறிவார்ந்த தமிழ்ப் பிள்ளைகள் அறியத் தவறவில்லை. இனியும், இத்தகைய திணிப்புகள் தொடர்ந்தால் காவிக்கு மணி கட்ட எத்தகைய போராட்டத்தை முன்னெடுக்கவும் நாம் தமிழர் கட்சி தயங்காது.
10. கோடிக்கணக்கான விவசாயிகளின் கூக்குரலையும் பொருட்படுத்தாமல் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கும் மோடி அரசை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது எனச் சொல்லி டெல்லியில் முதல்வரின் கண் முன்னாலேயே கஜேந்திர சிங் என்கிற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அத்தகைய பேரதிர்வு நிகழ்வுக்குப் பிறகும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு காட்டுகிற அவசரம், பன்னாடுகளுக்கு இந்த தேசத்தைக் கூறுபோட்டுக் கொடுக்கிற கூலிக்கான மாரடிப்பே ஆகும். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளே இந்தக் கொடூரச் சட்டத்தை எதிர்க்கும் நிலையில், இந்தியப் பிரதமர் என்பதை மறந்து பன்னாடுகளின் தரகராகவே தன்னை அறிவித்து மகிழும் மோடி அவர்களை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது நாம் தமிழர் கட்சி. இந்த மண்ணின் வளம் மக்களின் நலனுக்கானது. அற்ப அரசியலுக்காக விவசாயத்தைத் தின்று ஏப்பம் விடும் பா.ஜ.க. அரசு இந்த மண்ணில் இருந்து அடியோடு துடைத்து எறியப்படும் நாள் தூரத்தில் இல்லை என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகச் சொல்லிக் கொள்கிறது.
11. ஆயிரக்கணக்கான மக்களின் அச்சத்தையும் எதிர்ப்புப் போராட்டத்தையும் புறந்தள்ளி, கூடங்குளத்தில் அணு உலையைக் கொண்டுவந்த மத்திய அரசு, இப்போது மேலும் இரு அணு உலைகளை அங்கே நிறுவப்போவதாக அறிவித்திருப்பது அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மக்கள் எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், அதையெல்லாம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நினைத்ததைச் செய்யும் மனநிலையிலேயே மத்திய அரசு செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கூடங்குளம் அணு உலை செயல்பாட்டுக்கு வந்த பிறகும், மக்களுக்கு உரிய தற்காப்புப் பயிற்சிகளை வழங்காத அரசுத் தரப்பு, பேரிடர் ஆபத்துகள் வந்தால் யார் பொறுப்பேற்பார்கள் என்பதையும் அறிவிக்கவில்லை. அணு உலை செயல்பாட்டால் ஏற்கெனவே மக்கள் அனுதினமும் உயிர்நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் இரு அணு உலைகள் திறக்கப்படும் என்கிற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அனுதின மரண அவதியிலிருந்து கூடங்குளம் மக்களைக் காப்பாற்றவும், உரிய தற்காப்பு மற்றும் பாதுகாப்புப் பயிற்சிகளை வழங்கவும் அரசுத் தரப்பு உடனடியாக முன்வர வேண்டும்.
12. தமிழக மீனவர் பிரச்னையில் கடந்தகால‌ காங்கிரஸ் அரசுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வகையில், பாரதீய ஜனதா அரசும் பாராமுகம் காட்டி வருகிறது. தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு எள் முனையளவும் முனைப்பு காட்டவில்லை. ‘எல்லை மீறும் தமிழக மீனவர்களைச் சுடத்தான் செய்வோம்’ என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பகிரங்கமாகவே சொல்கிறார். சொந்த நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்களின் படகுகளைப் பறித்தும், வலைகளை அறுத்தும் சிங்கள அரசு செய்யும் அடாவடி இந்த அரசுக்கு அவமானமாகவோ வலியாகவோ படவில்லை. தமிழக மீனவர் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு கச்சத்தீவு மீட்பில்தான் அடங்கி இருக்கிறது. கச்சத்தீவு தமிழர்களின் சொத்து. தமிழர்களுக்கான வாழ்விடம். அதனை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததுதான் மீனவர்கள் அனுபவிக்கும் அத்தனை துயரங்களுக்குமான காரணம். எனவே, கச்சத்தீவை மீட்பதே மீனவத் துயரங்களுக்குமான ஒரே மீட்பு. இதற்கான முயற்சியை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். தமிழக மீனவர்களின் காலாகாலக் கதறல்களை மனதில் கொண்டு மத்திய அரசும் இதற்கான வழிவகைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கிடையில், மண்ணைக் கூறுபோட்டுக் கொடுக்கும் தீவினைகள் போதாது என எண்ணி, கடல் வளத்தைக் கூறுபோடும் கொடூரத்தையும் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. இந்தியக் கடல் பரப்பைப் பன்னாடுகளுக்குக் கூறுபோடும் மீனாகுமாரி அறிக்கையைக் கடுமையாகக் கண்டிக்கும் நாம் தமிழர் கட்சி, அத்தகைய மேற்கொள்ளலை மத்திய அரசு செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் நாம் தமிழர் கட்சி மிகத் தன்மையாகச் சொல்லிக்கொள்கிறது.
13. தாய் மொழிச் சிதைவு என்பது பெற்ற தாயைச் சிதைக்கும் கொடூரத்துக்கு நிகரானது. தொன்மைச் சிறப்பும் பாரம்பரியப் பெருமையும் கொண்ட தாய்மொழித்
தமிழோடு பிறமொழி கலந்து பேசுவதை ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் மனக் கட்டுப்பாடு கொண்டு உடனடியாகக் கைவிட வேண்டும். நாக்கைத் திருத்தாமல் நாட்டைத் திருத்த முடியாது. மொழிச் சிதைவைக் காக்க வேண்டிய கடமை கலை உலகத்தினருக்கே முதன்மையாக இருக்கிறது. திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறை, ஆபாசக் காட்சிகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது பிறமொழிக் கலப்போடு வசனங்களைப் பேசுவது. பெரிய திரை மற்றும் சின்னத்திரைக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளில் பிறமொழிக் கலந்து பேசுவதை அறவே கைவிட வேண்டும். ‘தலைக்கனம் அகற்றுவதே கலைக்குணம்’ என்பார்கள். அதற்கேற்ப மேதாவித்தனமாகப் பார்க்கப்படும் ஆங்கிலக் கலப்பை அடியோடு அகற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ்க் கலைஞ‌ர்களுக்கும் இருக்கிறது. தாய்மொழி காக்கும் இந்த மகத்துவப் பணிக்கு ஒவ்வொரு தமிழர் இதயங்களும் இன்றே தயாராக வேண்டும் என நாம் தமிழர் கட்சி அறைகூவல் விடுக்கிறது.
14. வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு செல்லும் இளைஞர்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அந்நிய தேசங்களில் இரத்தத்துக்கு நிகராக வியர்வை சிந்தி, அதற்கான ஊதியமோ அங்கீகாரமோ இல்லாமல் நம்மவர்கள் துயர்படும் நிலையைக் கேட்கிற போதெல்லாம் தாங்கொணா வேதனை மேலிடுகிறது. எத்தகைய வளங்களுக்கும் குறைவில்லாத நம் தமிழகத்தில் உரிய வேலை வாய்ப்புகள் பெருகாமல் போனதும், அதற்கான முன்னெடுப்புகளை அரசோ தனியார் பெருமுதலாளிகளோ செய்யாமல் போனதும் வேதனையானது. தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடுவதாகச் சொல்லப்படும் புள்ளிவிபரத்தைச் சுலபத்தில் புறக்கணித்துவிட முடியாது. தமிழகத்தில் 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், உரிய திட்டமிடலை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். எந்த வேலையும் அற்ற மனநிலை இளைய சமூகத்தை எத்தகைய அபாயத்தின் பக்கமும் திருப்பிவிடும் என்பதை அரசு நுட்பமாக உணர வேண்டும். ஏற்றுமதி வாய்ப்புகள் நிறைந்த திருப்பூர் பகுதியில் மட்டும் ஒரு கோடி பேர் வேலை வாய்ப்புப் பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய முடியும் என்கிறார்கள் அங்கிருக்கும் தொழில் வள ஆர்வலர்கள். எனவே, உரிய வேலை வாய்ப்புகளை இங்கேயே ஏற்படுத்தி இளைய சமுதாயத்தை வளமானதாகவும் நலமானதாகவும் மாற்றி, அதன் மூலமாக தொழில் வளத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
15. காலம் காலமாகத் தொடரும் அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் உடைத்து ஆணுக்குச் சமம் பெண் என்கிற நிலையையும் தாண்டி அளப்பரிய பணிகளைப் பெண்கள் செய்யத் தொடங்கிவிட்டார்கள். சுயதொழில் செய்வது தொடங்கி கனரக வாகனங்கள் இயக்குவது வரையிலான அத்தனை விதமான பணிகளையும் செய்து, தன்மானத்திலும் வருமானத்திலும் பெண்கள் உயர்ந்து நிற்கிற காலம் உருவாகிவிட்டது. தந்தை பெரியார் கண்ட கனவு நனவாகும் இத்தகைய உயரிய சூழலிலும் பெண்கள் மீதான தாக்குதலும், பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் போக்கும், பாலியல் தொந்தரவுகளும், இணையதளச் சீண்டல்களும், அமில வீச்சுகளும் பெருகியபடியே இருப்பது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. வளர்ச்சியை நோக்கிய பெண்களின் பயணம், பல நூற்றாண்டு நெருக்கடிகளை நெட்டித்தள்ளிக் கிளம்பியிருப்பது. அதனை வேகம் குறையாமல் முன்னோக்கி அழைத்துச் செல்வது அரசு தொடங்கி ஒவ்வொரு ஆண் மகனுக்குமான கடமை. பெண்களுக்கு எதிரான செயல்களைப் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளைப் பாய்ச்சியும், பெண்களுக்கு உரிய பாதுகாப்புகளைச் செய்து கொடுத்தும், கலை தொடங்கி சுய தொழில் வரையிலான அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்களை கௌரவப்படுத்தியும் பெண்களின் வளர்ச்சியை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சி மிகுந்த அக்கறையோடு கேட்டுக்கொள்கிறது.

22 May 2015

நாம் தமிழர் கட்சி மாநாட்டிற்க்கு வரும் தோழர்களுக்கு ஒரு முக்கிய குறிப்பு :

  
ஆதிமுக, திமுக,தேமுதிக போன்ற கட்சி கூட்டத்திற்கு ஆட்க்களை திரட்ட கோழி பிரியாணியும் மதுபானமும் குடுப்பார்கள் அதை எங்களிடம் எதிர் பார்க்கக்கூடாது நாங்கள் தமிழ் நாட்டில் ஒரு மற்று அரசியல் புரட்சியா வாதிகள்,
இலக்கை நோக்கி புனிதமான நோக்கத்தோடு மானமுள்ள தமிழ் பிள்ளைகளாக மே 24-ல் திருச்சியில் கூடுகிறோம்,
அனைத்து தாய் தமிழ் உறவுகளும் ஒன்று கூடுங்கள்.
மானமுள்ள தமிழன் என்று நாம் ஒன்று சேர்ந்து காட்டுவோம்,
இந்தியனாய் இருந்தது போதும்,
திராவிடனாய் திரிந்தது போதும்,
திரண்டு வா மானமுள்ள தமிழனாய்.
நாமே மற்று நாம் தமிழரே மாற்று.
என் பிள்ளைக்கு நான் தந்தையாக இருந்தால் தான் நான் ஆண் மகன் அதேப்போல என் மண்ணை ஆழ்பவனும் நானாகத்தான் இருக்க வேண்டும் அப்படி நான் ஆழாமல் வேறு ஒரு மொழி பேசுபவன் ஆட்சி செய்தால் நம் தமிழ் நாட்டில் ஒருவனும் ஆண் இல்லை என்று அர்த்தம் நாம் நம் நாட்டை ஆழ ஒன்று கூடுவோம் மே 24-ல் திருச்சியில்.
நாம் தமிழர்........

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.அருள் அரிவாளால் தாக்கப்பட்டார் .

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், வேப்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் திமுக பிரமுகர் கருணாநிதியின் ஊழலை தட்டிகேட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.அருள் அரிவாளால் தாக்கப்பட்டார். இதை கண்டிக்கிற வகையில் வரும் 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற இருக்கிறது.....


.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்