naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

27 Mar 2015

வி.களத்தூர் மார்ச் 28 முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு ! நாம் தமிழர் கட்சி வி.களத்தூர் கிளை அறிவிப்பு!




வி.களத்தூர் மார்ச் 28 முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு ! நாம் தமிழர் கட்சி வி.களத்தூர் கிளை  அறிவிப்பு! 

இதுக்குறித்து  நாம் தமிழர் கட்சி வி.களத்தூர் கிளை தலைவர்  ஜலால்லுதீன்   அறிக்கையில் கூறியிருப்பதாவது :
  
காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய அளவில், உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தரமறுக்கும் கர்நாடக அரசு இப்போது வந்துகொண்டிருக்கும் நீரையும் முடக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காவிரியின் உபரிநீரை தேக்கும் வகையில் காவிரியின் நடுவே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகள் கட்ட திட்டமிட்டு அதற்காக நதிநிலை அறிக்கையில் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

கர்நாடக அரசின் இத்தகு அடாத செயலுக்கு எதிராக விவசாயிகள் முயற்சியில் மார்ச் 28ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கும் முழு அடைப்பு போராட்டத்தினை நாம் தமிழர் கட்சி வி.களத்தூர் கிளை  வரவேற்பதோடு, இப்போராட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

இம் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் முழு ஆதரவு தரவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதோடு, முழு அடைப்பு போராட்டம் வெற்றியடைய பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

31 Jan 2015

வி.களத்தூரில் உள்ள சீமை கருவேலமரம் முற்றிலும் அகற்ற வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக மனு

நேற்று  (30/01/2015) வி.களத்தூரில் உள்ள சீமை கருவேலமரம் முற்றிலும் அகற்ற வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக வி.களத்தூர் கிளை செயலாளர் இஷாக் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இதில்      வி.களத்தூர் கிளை தலைவர்  ஜலால்லுதீன்,  கிளை  நிர்வாகிகள் அசரப் அலி ,பாசித்   உள்ளிட்டோர் உடன்  இருந்தனர் .


15 Jan 2015

"சிறு சுவரொட்டி திட்டம்"

"சிறு சுவரொட்டி திட்டம்" -பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் இளைஞர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த சிறு சுவரொட்டிகள் வி. களத்தூரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு கடைகளுக்கும் கொண்டு செல்வதாகும். காலையில் கல்லூரி படிப்பு முடித்து இரவு முழுதும் சுவரொட்டி ஒட்டும் வேலையில் இளைஞர்கள் இறங்கி உள்ளனர். இரண்டு மாதத்திற்குள் வி. களத்தூர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கும் நாம் தமிழர் கட்சியை கொண்டு செல்ல இளைஞர்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர்.












25 Dec 2014

மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க நாள்

தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.

பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது
மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது. தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்து வருகின்ற தெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.

அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.
 
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம். தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.
இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.
கதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை?

ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா?
ஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா?

குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா?
ஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா? இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும்;;உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும்; என்பதே.

மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.
மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.

24 Dec 2014

நாங்கள் பிரபாகரன் வாரிசுகள் எதையும் செய்வோம் – சீமான் பேச்சு

மயிலாடுதுறை: மீத்தே எரிவாயு எடுப்பதை கர்நாடக அரசு தடுக்காவிட்டால், நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் எதையும் செய்ய தயங்க மாட்டோம் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

மீத்தேன் எரிவாயு எடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு காவரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இரண்டு இடங்களில் கட்டப்போகும் அணைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

அங்கு அவர் பேசியதாவது "மீத்தேன் எடுப்பதற்கு அனுமதி வழங்கிய காங்கிரஸை அப்புறப்படுத்தி விட்டோம். புதிதாக ஆட்சியேற்றிருக்கும் பி.ஜே.பி அரசு புதுப்பிக்க நினைத்தால் அவர்களையும் அகற்றுவோம். 

அதை விட்டு விட்டு க்ளீன் இண்டியா என்று சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்டு வெற்றி பெற்று விடலாம் எனக் கனவு கண்டு வீதியில் ஓட்டு கேட்டு வந்தால் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து வந்து இங்குள்ள நிலைமையை உணர செய்வோம். நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள். எதையும் செய்ய தயங்க மாட்டோம் என்று பேசினார் சீமான்.

கே பாலச்சந்தர் மரணம்... சீமான் அஞ்சலி

பழம்பெரும் இயக்குநர் பாலசந்தர் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 

அதில், சீமான் கூறியிருப்பதாவது:

 நாடகக் கலைஞராக கலையுலகில் அடியெடுத்து வைத்த அய்யா பாலசந்தர் அவர்கள் தமிழ்த் திரையுலகில் நிகழ்த்தாத புரட்சி இல்லை. சாதியமும் மதப்பிடிப்பும் பெரிதாக நிலவிய அந்த காலகட்டத்திலேயே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத புதுமைகளை நிகழ்த்திக் காட்டிய பெருமை அய்யா பாலசந்தர் அவர்களையே சேரும். 



நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், மிகப் பிரசித்தியான நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியும் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் அய்யா பாலசந்தர் அவர்கள். நாகேஷ், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சரிதா, சுஜாதா, மேஜர் சுந்தர்ராஜன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட எத்தனையோ கலைஞர்களைத் தமிழ்த் திரையுலகுக்கு அடையாளப்படுத்தி வைத்த கலையுலகக் கண்டுபிடிப்பாளர் அவர். தனது இறுதிக்காலம் வரை இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கும் மாற்று சிந்தனையோடு வந்தவர்களுக்கும் ஊக்கமளித்து உதவியது அய்யா அவர்களின் தனிச்சிறப்பு. 

தனக்குப் பிடித்த திரைப்படங்களைப் பாராட்டி, தனது கைப்படவே கடிதம் எழுதி சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தும் நற்குணம் கொண்டவர் அய்யா பாலசந்தர் அவர்கள். விவசாயம், சாதியம், தமிழிசை, கலப்பு திருமணம், தேசப்பற்று என சகலவிதமான விதைப்புகளையும் மிகுந்த தைரியத்துடன் தனது படங்களில் செய்துகாட்டியவர்.

 மிக உயரிய பால்கே விருதைப்பெற்ற அய்யா பாலசந்தர் அவர்கள் தனது இறுதிக்காலம் வரையிலும் தமிழ்த் திரையுலகின் ஆக்கபூர்வங்களுக்காகவே பாடுபட்டவர். உடல்நிலை நலிவுற்ற போதும் உத்தமவில்லன் படத்தில் நடித்த அவருடைய ஆர்வமும் பிடிப்பதும் வேறு எவருக்குமே கைவராதது. கலையுலகில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்விலும் மிகுந்த கண்ணியத்துடன் வாழ்ந்த அந்த பெருமகனின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகின் பேரிழப்பு. அய்யா அவர்களின் குடும்பத்துக்கும் கோடிக்கணக்கான அவர் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது. அய்யா அவர்களின் பெயரில் விருதுகளை அறிவித்து மத்திய மாநில அரசுகள் அந்த நிகரற்ற கலைஞரை கௌரவிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைக்கிறது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

18 Dec 2014

அதிகாரிகளின் துணையுடனேயே அநியாய மணல் அக்கிரமங்கள் அரங்கேற்றப்படுகின்றன: சீமான் குற்றச்சாட்டு



பாலாற்றில் மணல் எடுத்தவர்களைத் தடுத்த பொதுமக்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 

அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டு ஆறுகளில் மணலைச் சுரண்டும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அரசு விதித்திருக்கும் நெறிமுறைகளையும் வரம்புகளையும் மீறி பூமியின் தோலைச் சுரண்டும் கொடூரத்தை மணல் தாதாக்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். அரசிடம் காட்டும் உரிமக் கணக்குக்கும் அள்ளும் மணலுக்கும் கொஞ்சமும் பொருத்தமின்றி மணல் மாபியாக்கள் அநியாய கொள்ளையை அரங்கேற்றி வருகிறார்கள். இதனை அரசுத் தரப்பு அதிகாரிகள் துணிச்சலுடன் தட்டிக் கேட்க வேண்டும். ஆனால், நிறைய இடங்களில் அதிகாரிகளின் துணையுடனேயே அநியாய மணல் அக்கிரமங்கள் அரங்கேற்றப்படுகின்றன. 

பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக அங்கிருக்கும் பொதுமக்களும் விவசாயப் பெருமக்களும் அதிகாரிகளிடத்தில் முறையிட்டிருக்கிறார்கள். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், பொதுமக்களே அத்துமீறிய மணல் கடத்தலைத் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் மணல் அரக்கர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய காவல்துறை, கடத்தலைத் தடுத்த பொதுமக்கள் மீதே வழக்குப் போட்டிருக்கிறது. 

சட்டம் ஒழுங்கையே கேலிக்கூத்தாக்கும் இத்தகைய ஏவல் நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பாலாற்றின் நலன் காக்கப் போராடிய மக்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், அங்கே மணல் கொள்ளை நிகழாதபடி தடுக்கக்கூடிய கோரியும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

சட்டமும் சம்பந்தப்பட்ட துறையும் மௌனமாகி ஆதாய சக்திகளுக்குத் துணை போகும்
போதுதான், மக்கள் தாங்களே குற்றவாளிகளைத் தண்டிக்கத் துணிகிறார்கள். ஆனால், அரசுத்தரப்பு தானும் செய்யாமல், செய்பவர்களையும் விடாமல் தடுப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. மணல் விவகாரத்தில் அதிகாரத் தரப்பின் எண்ணம் மக்கள் நலன் பேணும் எண்ணமாக மாற வேண்டும். தட்டிக் கேட்கும் மக்களுக்கு உற்ற துணையாக அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

17 Dec 2014

வேலூர் மாணவி பாலியல் படுகொலை...- சீமான் கடும் கண்டனம்

சென்னை: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசுப்பள்ளி மாணவி கீர்த்தனா பாலியல் பலாத்காரக் கொலை செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் கூறியிருப்பதாவது: 

ஆறாம் வகுப்பு மாணவி கீர்த்தனா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது மிகுந்த துயரத்தையும் தாங்கொணா பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தால் பெற்றோர்கள் குலை நடுங்கிப் போயிருக்கிறார்கள். பள்ளி மாணவி சக மாணவனாலேயே இத்தகைய கொடூரத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. 


அந்தப் பள்ளிக்கு அருகிலேயே மதுக்கடை இருப்பதாகவும் சம்பவத்தின் போது அந்தப் படுபாதக மாணவன் மது போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மது, எத்தகைய பேரவலங்களை எல்லாம் இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிடக் கொடிய உதாரணம் தேவையில்லை. 

ஒழுக்கத்தையும் நல்லெண்ணத்தையும் விதைக்க வேண்டிய கல்வித் திட்டங்கள் எந்தளவுக்கு நெறிபிறழ்ந்து போய்விட்டன என்பதையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். வெறும் மனப்பாடப் பகுதிகளாகவும், எதற்கும் உதவாத வணிக நோக்கமாகவும் மட்டுமே நம்முடைய கல்வித் திட்டங்கள் இருக்கின்றன. 

ஒரு மாணவனே சக மாணவியைக் கற்பழித்துக் கொன்ற கொடூரத்துக்கு அதிகாரமும் அரசு மெத்தனமும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

கொலை செய்யப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதலான உதவிகளை அரசுத் தரப்பு உடனடியாகச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அந்த மாணவன் மட்டும் அல்லாது வேறு எவரேனும் இந்தக் கொடூரத்துக்குத் துணை போனார்களா என்பதையும் காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கொடூரங்கள் மறுபடியும் நடந்து விடாதபடி தடுக்கும் விதமாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவர்களுக்கு உரிய நெறிமுறைகளையும் பக்குவமான கற்பிதலையும் ஆசிரியர்களைக் கொண்டு சொல்லிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  -இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

15 Dec 2014

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

                                                      

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார்.
ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.
தமிழகத்தில் ஈழ நெருப்பை மூட்டிய அப்துல் ரவூப்.
என் மகன் அப்துல் ரவூஃப்-ன் ஈகம் பற்றிய சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை ‘முதல் நெருப்பு’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் தம்பி சே.ஜெ. உமர் கயான் நூலாக்கித் தந்துள்ளார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் ரவூஃப் பிறந்து, வாழ்ந்து மறைந்த ஊரில் தரவுகளை திரட்டித் தொகுத்து பதிவு செய்வது கடினமானதுதான். அப்துல் ரவூஃப்-ன் ஈகம் பற்றிய வரலாற்றை பதிவு செய்ய பலர் முன்வந்த போதும் தம்பி உமர் கயான் மூலம் நிறைவேறியுள்ளது. இந்நூலில் பல்வேறு செய்திகள், நிகழ்வுகள் விடுபட்டு போயிருப்பினும் இந்நூலாளர் அதையும் சுட்டிக் காட்டி அடுத்த பதிப்பில் சேர்க்கலாம் என்று கூறியிருப்பது என் மனதிற்கு இதமாக உள்ளது.
அப்துல் ரவூஃப்ன் ஈகத்திற்கு பிறகு தம்பி வழக்குரைஞர் தமிழகன் (தமிழ் காவிரி மாத இதழின் ஆசிரியர், தமிழக ஆறுகள் இணைப்பு இயக்கத்தின் தலைவர், திருச்சி) அவர்கள் ரவூஃபின் சுருக்கமான வரலாற்றுடன் நெருப்பின் வரிகள் என்னும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அது ஒரு ஆவணமாக இன்றுள்ளது.
அப்துல் ரவூஃப் நெருப்பானான் என்ற செய்தி கிடைத்து நான் ஓடிச்சென்று அவனைப் பாத்தபோது, அவனது உள்ளாடை கங்குகளில் கணன்ற நெருப்பினை என் கையாலேயே அணைத்தேன். என்ன ராஜா இவ்வாறு செய்துவிட்டாயே என்று கேட்டபோது, அவன் சொன்னான் “பாபு அழாதீர்கள், நெஞ்சை நிமிர்த்தி நில்லுங்கள், மாவீரனைப் பெற்ற தந்தையாக நில்லுங்கள், ஈழத் தமிழரை காப்பதற்காக உங்கள் மகன் உயிர்த்தியாகம் செய்திருக்கிறான் என்று பெருமைப்படுங்கள்” என்று படபடத்தான்.
அதையும் மீறி நான் அழுதபோது அவன் சொன்னான், “என்ன பாபு உங்களையே நான் மாவீரனாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், நீங்களே அழலாமா?”
“கண்ணா ஈழத்தமிழரை காப்பாற்ற எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது” என்று கூறியபோது, “இதனைத் தவிர எனக்கு வேறு வழித் தெரியவில்லை பாபு” என்றான்.
மருத்துவமனையில் கணீர் குரலில் அவன் பேசிய பேச்சுக்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மறைவிற்குப் பிறகு நடக்கக் கூடாத சம்பவம் தமிழகத்திலே நடந்துவிட்டதே என எண்ணி தமிழக மக்கள், ஈழத் தமிழர்கள், விடுதலைப்புலிகள் பேரில் வெறுப்புடன் இருந்த நேரம், ஈழத்தில் சிங்களக் காடையர்களால் தமிழர்கள் ஈவூ இரக்கமின்றி கொன்று குவிப்பதை அறிந்தும், வாய்திறவாமல் மௌன சாட்சியாக இருந்த நேரம், யாழ் நகர மக்கள் 5 லட்சம்பேர் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள புலம் பெயர்ந்து காடுகளில் தஞ்சம் புகுந்தும், வெளிநாடுகளில் ஏதிலிகளாக தஞ்சம் அடைந்த நேரம், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், இனி ஈழம் என்பது கனவுதானோ என்று எண்ணிய நேரம், தாய் தமிழகத்தின் ஆதரவு எமக்கில்லையோ என விடுதலைப் புலிகள் சோர்ந்திருந்த நேரம், அப்துல் ரவூஃப் தன் உயிரை ஈகம் செய்தது தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்ற வரலாற்றுப் பதிவாக இந்நூல் இருக்கும்.
எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்று ஓங்கிய குரலில் அவன் ஒலித்தபோதும், அவன் ஏற்றுக் கொண்ட தலைவர் வைகோ மட்டுமே என்பது எனக்கும் ரவூஃப்க்கும் மட்டுமே தெரிந்த உண்மை.
அவனது மறைவிற்குப் பிறகு, மகனே போன பிறகு அவன் நிழற்படங்கள் எதற்கு, அவன் போற்றிய காசி ஆனந்தனின் கவிதை நூல்கள், வைகோவின் பாராளுமன்ற பேச்சு தொகுப்பு நூல்கள், இன்ன பிற நூல்கள் அத்தனையையும் அவனது தாய் சாம்பலாக்கியபோது, மௌனமாக பார்த்ததைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ரவூஃப்-ன் மறைவைத் தொடர்ந்து, அணி அணியாக, தனித்தனியாக, கட்சி, சாதி மத வேறுபாடுகள் இன்றி எங்களை சந்தித்து ஆறுதல் கூறியவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.
ரவூஃப் மறைந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்திலிருந்து தலைவர் ரகசியமாக இருவரை அனுப்பி ஆறுதல் கூறினார். அப்துல் ரவூஃப்-ற்காக மாவீரர் கல் நடப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கூறியதுடன், தைரியமுடன் இருங்கள் என்று கூறிய தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
துக்கத்தைப் பகிர்ந்து கொண்ட அத்துணை அரசியல் தலைவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
பா.ம.க. கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் தன்னுடைய வாக்குறுதியின்படி எனக்கும், என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இன்றளவும் காப்பாக இருந்து வருவதை நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.
அப்துல் ரவூஃப்-ன் அண்ணன் ஆசிக் அலி (பொறியாளர்)-க்கு தமிழக அரசில் வேலை வாங்கிக் கொடுக்க பெருமுயற்சி செய்து, இயலாமல் போனாலும் அவர் எங்கள் குடும்ப நல வாழ்விற்கு முயன்றதை வாழ்நாள் முழுமையும் நினைத்து ஆறுதல் பெறுகிறோம்.
அருமைத் தம்பி செந்தமிழன் சீமான், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈகி அப்துல் ரவூஃப்-ஐ கண்டறிந்து வீரவணக்கம் செய்து தமிழகம் முழுமையும் அவன் புகழ் பரப்பி வருவதையும், அவன் பெயரில் நாம் தமிழர் மாணவர் பாசறையின் குறியீடாக ஆக்கியுள்ளதை நெஞ்சம் நெகிழ அவரை வாழ்த்துகிறோம்.
“உன் முடிவு எங்களுக்கு முன்னுதாரணமல்ல
ஆனாலும் மூடப்பட்ட உன் புதைகுழி
சடலத்திற்காக
தயாரிக்கப்பட்ட சிறையல்ல
ஒரு இனப்புரட்சிக்காய்
நீ தொடங்கி வைத்த அலுவலக அறை”
– வழக்குரைஞர் ஆ. இராசா
(முன்னாள் மத்திய அமைச்சர்)
உலகிலேயே, தம் இனத்திற்காக முதல்முதலாக தன்னுயிரை ஈகம் செய்தவரின் தந்தை என்ற பெருமிதத்தோடு நிறைவு செய்கிறேன்.
தமிழோடு தமிழராய் வாழ்வோம்
வாழ்த்துக்களுடன்
அ.அசன்முகமது,
பெரம்பலூர்.
அ.அசன்முகமது.

முகம் அறியாத உறவிற்கு ஒரு கடிதம்

Thaay Tamilakaththil Mooddiya Muthal Nerupu
எனக்காகத் தீக்குளித்த உடன்பிறப்பே, இனத்திற்காய் உயிர் துறந்த உறவே, உன் பெயர் அறியேன், உன் முகம் அறியேன், சரியான உன் முகவரி அதுதானும் அறியேன், ஆயினும் இதை எழுதுகிறேன். இக் கடிதம் உனக்கு வந்துசெராது என்பதுவும் எனக்குத் தெரியும். ஆனாலும் உன் அர்ப்பணிப்பைக் கூறாமல் இருக்க முடியவில்லை. எம் தேசத்தின் இளம் தலைமுறை இன்று புதிய விதத்தில் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்பதற்காய் எழுதுகின்றேன்.
நீ தீக்குளித்த செய்தி அறிந்து திகைத்தேன். வேதனையோடு வெட்கத்துள் முகம் புதைத்து அழுதேன். உனக்காக மட்டுமல்ல, என்னையும் எண்ணித்தான். பேர் அறியா உறவே என்னை உனக்குத் தெரியாது, ஆனால் இன்று எனக்கு மட்டுமல்ல உலகத்திற்கே உன்னைத் தெரிந்துவிட்டது. என் மனக் கண்ணில் நீ நடாத்திய யாகம் தெரிகிறது. நீ எழுதிய இறுதி வரிகளும் தெரிகிறது. நீ எரிகிறாய், நெய்யாய் உருகிறாய், புழுவாய் நெளிந்து விழுகிறாய், ஐயனே நீ படும் வேதனையை என்னால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. ஏன் இந்த வேதனை? யாருக்காக இந்தத் தியாகம்? எனக்காகத்தானே, என் உறவுக்காகத்தானே, என் அம்மாவிற்காக, என் அப்பாவிற்காக, அக்காவிற்காக, தம்பி தங்கைக்காக, என் குடும்பத்திற்காக, எங்கிருந்தோ நீ உன்னை வருத்தி உயிரை விட்டாய். ஆனால் நான் மட்டும் இங்கே, என் உறவிற்காக உயிர் நீத்த உத்தமனே ,ஏன் இப்படிச் செய்தாயோ? எனக்குப் புரிகிறது. உனக்கும் ஒரு சொந்த நாடு இருந்திருக்குமானால் நீ இப்படி யோசித்து மாண்டிருக்க மாட்டாய். படைதிரட்டி வந்து தமிழன் யார் என்பதைக் காட்டியிருப்பாய். என்ன செய்வது? உலகம் எங்கும் பறந்து வாழும் தமிழனுக்கு ஒரு நாடு இல்லை. சுதந்திரமாய் குந்தி இருக்க ஒரு கூடு இல்லை, தமிழனாகப் பிறந்ததற்காக நிம்மதியான ஒரு வாழ்வு இல்லை. இந்த அவல நிலைமையை மாற்றப்போவது தமிழீழம்தான் என்பதை நீ சரியாகப் புரிந்து கொண்டாய். தமிழன் என்றாலும் உலகில் எந்த மூலையில் வந்தாலும் உணர்வால் ஒன்று பட்டவன் என்று தத்துவத்திற்கு புத்துயிர் ஊட்டிவிட்டாய். என் இனத்தின் இரத்தமே, உன் தேசத்தில் நீ மூட்டிய நெருப்பு உன்னை மட்டும் எரிக்கவில்லை. தமிழ் உருவத்தில் எதிரிக்கு கொள்ளி கொடுக்கும், கோடரிக் காம்புகளின் போலி முகத் தோலையும் எரித்துவிட்டது. எம் தேசத்தில் இளைஞர், யுவதிகளின் நெஞ்சத்திலே புதிய வேகத்தை ஊட்டிவிட்டது. இனியும் எம் இன்லம் தலைமுறை உறங்காது. விழித்து எழும். எம்பகி வேருடன் விழும். உன் நினைவு நெஞ்சத்தில் நீங்காது வாழும்.

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப்


Apthul Ravoop Udpada.....
யாழ். குடாநாட்டின் மீது சந்திரிகா தலைமையிலான சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பினால் பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதனால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் அவர்களின் விடியலுக்காக தமிழகம் திருச்சியில் 15.12.1995 அன்று தீக்குளித்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட “ஈகைத்தமிழன்” அப்துல் ரவூப் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள் இன்றாகும்.
Major Valavan
தமிழினத் தியாகி அப்துல் ரவுஃப்வுக்கு தலைசாய்த்து அஞ்சலிக்கின்றோம்
நெஞ்சம் கனக்க, முகம் தெரியாத அந்த தியாகியின் உயிர்த்துடிப்பை எம்முள் நிறைத்துக்கொண்டோம். போராளிக்குரிய உறுதி. தியாகத்தின் எல்லையைத் தொட்டு உலுப்பும் கரும்புலிகளை ஒத்த தற்கொடை. தான், தன்வீடு, தன்தேசம் என்ற எல்லை கடந்து அயலில் அழுது துடிக்கும் தன் இனத்துக்காக நெஞ்சு துடித்தவர். ஈழத்தமிழருக்காய் உயிர் கொடுத்த மானத்தமிழன் அப்துல் ரவுஃப். இன்று அவரது பெயர் ஈழத்தமிழர்களின் உள்ளங்களில் உச்சரிக்கப்படுகின்றது. தமிழீழமே திரண்டு அவர் தியகத்திற்காய் கண்ணீர் வடித்ததே. போராளிகளை அஞ்சலிக்கும் எம் மண்ணில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த் தியாகி அப்துல் ரவுஃப்புக்கு அஞ்சலி செலுத்த எம் தேசம் திரண்டதே. ஒரு போராளியாய் அந்தத் தூய தமிழ்த்தியாகி எம்முடன் வாழ்வார்.
அவரது இந்த உறுதியான தடம், உணர்வுள்ள தமிழர்களுக்கு பாதையாய் அமையட்டும். மருப்பில் வெந்து துடிக்கும் உதட்டுக்குள்ளால் “ஈழத்தமிழரைக் காப்பாற்றுங்கள்” என்ற வார்த்தை மட்டுமே வந்ததாம். கேட்டதில் நெஞ்சம் கனதியானோம். மலர்வளையம் வைத்து அஞ்சலிப்பதிலும் பார்க்க உள்ளக் கமலத்தில் உட்கார வைத்துள்ளோம். தமிழகத் தமிழரையும், ஈழத்தமிழரையும் பிரித்து வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் அக்கிரமக்காரர்களின் தலைகளில் ஆயிரம் அப்துல் ரவுஃப்கள் இடியாய் விழுவார்கள்.
வரலாற்றைப் பிரித்துப் போடப் பார்க்கிறார்கள். தொப்பிள்கொடி உறவை துண்டாடிவிடப் பார்க்கிறார்கள். தாயிருக்க சேயின் உயிர் பறிக்கத் துடிக்கிறார்கள். கலந்திருக்கும் எங்கள் சுவாசக் காற்றில் நஞ்சைத் தூவக் காத்திருக்கிறார்கள். ஆனால் யாவும் சத்தின்றி சருகாகிப் போகும் என்பதைத்தான் அப்துல் ரவுஃப்பின் தியாகம் எடுத்துரைக்கின்றது. தமிழக மக்களின் உணர்வின் வெளிப்பாடாய், எழுச்சியின் குறியீடாய்த்தான் அவரது தியாக மரணத்தைக் கருதமுடிகிறது. தாய் சேய் உறவைப் பிரித்துப் போடத் துடிக்கும் நாச சக்திகளுக்கு தன்னைக் கொடுத்து ஒரு பாடத்தைப் புகட்டியிருக்கிறார் அப்துல் ரவுஃப். இந்த உலகத்தை விட்டுப்போகும் இறுதித் தருவாயில் அவர் உரைத்த கடைசி வார்த்தை “இன்று நான் நாளை தமிழகம்”
“வாழ்க அப்துல் ரவுஃப் புகழ்”
பச்சைமுத்து வரைந்த வீரத்தமிழன் அப்துல் ரவூப் ஓவியம்……
abdul

9 Dec 2014

ராஜபக்ச வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி முற்றுகை போராட்டம்

மஹிந்த  ராஜபக்ச   இன்று  மாலை இந்தியாவின் திருப்பதி ஆலயத்திற்கு செல்லவுள்ளதால்  அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியினர் சென்னை திருப்தி ஆலய அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர்.
 
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்ச, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா துயரத்துக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக் கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தன் இனவெறிக் கொடூரங்களை மறந்துவிட்டு சர்வ சாதாரணமாக திருப்பதிக்கு வருவதும் போவதுமாக இருந்த ராஜபக்ச, இப்போதைய பா.ஜனதா கட்சியின் ஆட்சியிலும் அதே பயண நடவடிக்கைகளைத் தொடர்வது ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கவலையாகத் தமிழ் மக்களை நோகடிக்கிறது.
இலங்கையில் இருந்த எங்கள் பாட்டன் சிவன் கோயிலையும், எங்கள் பாட்டன் முருகன் கோயிலையும் இடித்துத் தரைமட்டமாக்கிய ராஜபக்ச, தான் செய்த பாவங்களை எல்லாம் கழுவுவதற்காக திருப்பதி வழிபாட்டுக்கு வருகிறாரா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோயில்களை ஈழத்தில் தரைமட்டமாக்கிக் கொக்கரித்த ராஜபக்சவுக்கு வழிபாடு ஒரு கேடா?

ஆந்திராவை ஆளும் சந்திரபாபு நாயுடு அவர்கள் இந்த விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மக்களை உற்ற உறவுகளாக எண்ணி வாழ்பவர்கள் தமிழ் மக்கள். அப்படியிருக்க எங்கள் இனத்தையே கருவறுத்த ராஜபக்சவை உங்கள் மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது எங்கள் இனத்தை ரணமாக்கும் செயல்.
ஆந்திர மண்ணுக்குத் துரோகம் செய்த ஒருவனை நிச்சயமாக தமிழ் மக்கள் தங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டார்கள். ஒருமித்த தேசத்தின் உறவுகளாகவும் அண்டை மாநில அன்பாகவும் இருக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜபக்ச வருகைக்குத் தடை விதிக்க வேண்டும்.

மத்திய அரசும் ராஜபக்சவின் வருகையைத் தமிழ் மக்களின் குரலாக நின்று தடுக்க வேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி ராஜபக்சவின் வருகைக்கு அனுமதி வழங்கப்படுமேயானால், சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட வெங்கடாஜலபதி கோயிலை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி கடுமையான போராட்டத்தை நடத்தும்.

தமிழர்களின் மனதில் வன்மத்தை விதைக்கும் செயல்பாடுகளை மத்திய அரசு இனியாவது கைவிட வேண்டும் என்பதை அந்தப் போராட்டத்தில் உரக்க வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.

8 Dec 2014

ராஜபக்சேயின் வருகையை இந்திய அரசும் ஆந்திர அரசும் தடுக்க வேண்டும்!

இலங்கை அதிபர் ராஜபக்சே வழிபாட்டுக்காக திருப்பதிக்கு வரவிருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

வருகிற 9-ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறிக் கொடூரனாக எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்சே, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா துயரத்துக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக்கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல். கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தன் இனவெறிக் கொடூரங்களை மறந்துவிட்டு சர்வசாதாரணமாக திருப்பதிக்கு வருவதும் போவதுமாக இருந்த ராஜபக்சே, இப்போதைய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியிலும் அதே பயண நடவடிக்கைகளைத் தொடர்வது ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கவலையாகத் தமிழ் மக்களை நோகடிக்கிறது. ராஜபக்சேயை இனப் படுகொலையாளனாக அறிவிக்கக் கோரி தமிழ் மக்கள் மட்டும் அல்லாது உலக நாடுகள் பலவும் போராடிவரும் நிலையில், தொடர்ந்து இந்தியப் பேரரசு ராஜபக்சேயை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது தமிழ்த் தேசிய இனத்துக்கான துரோகம்.

இலங்கையில் இருந்த எங்கள் பாட்டன் சிவன் கோயிலையும், எங்கள் பாட்டன் முருகன் கோயிலையும் இடித்துத் தரைமட்டமாக்கிய இனவெறியன் ராஜபக்சே, தான் செய்த பாவங்களை எல்லாம் கழுவுவதற்காக திருப்பதி வழிபாட்டுக்கு வருகிறாரா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோயில்களை ஈழத்தில் தரைமட்டமாக்கிக் கொக்கரித்த கொலைகாரனுக்கு வழிபாடு ஒரு கேடா? படுபாதகக் கொலைகாரனின் பரிகாரத் தளமாக மாறியிருக்கிறதா திருப்பதி? பௌத்த மதத்தை ஏற்று புத்தனை வழிபடும் ராஜபக்சேவுக்கு வெங்கடாஜலபதி கோயிலில் என்ன வேலை? எங்கள் இனத்தைக் கொன்றுபோட்ட இலங்கை அதிபர் எங்கள் தேசத்துக்கே வந்து வழிபாடு நடத்துவது எங்கள் இனத்துக்கான இழிவா இல்லையா?

வழிபாட்டுக்கு வருகிற ஒருவரைத் தடுப்பது முறையா என எங்களுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள், தமிழர்களின் வழிபாட்டுத் தளங்களை ராஜபக்சே இடித்துத் தள்ளியபோது எங்கே போனார்கள்? தமிழர்களின் உணர்வறியாமல் வழிபாட்டு உரிமையை வலியுறுத்திப் பேசுபவர்கள், அந்த இனவெறிக் கொடூரனின் ரத்தக் கறையை திருப்பதி தீர்த்ததைக் கொண்டு கழுவப் போகிறார்களா?

ஆந்திராவை ஆளும் மதிப்புமிக்க அய்யா சந்திரபாபு நாயுடு அவர்கள் இந்த விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மக்களை உற்ற உறவுகளாக எண்ணி வாழ்பவர்கள் தமிழ் மக்கள். அப்படியிருக்க எங்கள் இனத்தையே கருவறுத்த கொடூரனை உங்கள் மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது எங்கள் இனத்தை ரணமாக்கும் செயல். ஆந்திர மண்ணுக்குத் துரோகம் செய்த ஒருவனை நிச்சயமாக தமிழ் மக்கள் தங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டார்கள். ஒருமித்த தேசத்தின் உறவுகளாகவும் அண்டை மாநில அன்பாகவும் இருக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜபக்சே வருகைக்குத் தடை விதிக்க வேண்டும். மத்திய அரசும் ராஜபக்சேயின் வருகையைத் தமிழ் மக்களின் குரலாக நின்று தடுக்க வேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி ராஜபக்சேயின் வருகைக்கு அனுமதி வழங்கப்படுமேயானால், சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட வெங்கடாஜலபதி கோயிலை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி கடுமையான போராட்டத்தை நடத்தும். தமிழர்களின் மனதில் வன்மத்தை விதைக்கும் செயல்பாடுகளை மத்திய அரசு இனியாவது கைவிட வேண்டும் என்பதை அந்தப் போராட்டத்தில் உரக்க வலியுறுத்துவோம்.

தலைமை ஒருங்கிணைப்பாளர்

செந்தமிழன் சீமான்

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து 1 கோடி கையெழுத்து: பழ.நெடுமாறன் தொடங்கினார்!

தஞ்சாவூர்: மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் திட்டத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார்.
 
மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற கெயில் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை தமிழக அரசு புதுப்பிக்க கூடாது, மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், காவிரி படுகையை வேளாண்மை மண்டலாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு இன்று 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்த கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை உலக தமிழர் பேரவைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகியது ம.தி.மு.க!

சென்னை: பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெற்றிருந்தது. அக்கட்சிக்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டது. விருதுநகர் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட்டார். என்றாலும், 7 தொகுதிகளிலும் ம.தி.மு.க. தோல்வியடைந்தது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த நிலையில், நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த செயல் ம.தி.மு.க.வை அதிருப்தியடைய செய்தது.

முதலில் இருந்தே மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ம.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மீத்தேன் எரிவாயு திட்டம், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார்.

இலங்கை பிரச்னையில் வாஜ்பாய், அத்வானியை போல பிரதமர் நரேந்திரமோடியின் அணுகுமுறை இல்லை என்று கூறிய வைகோ, தமிழக மீனவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதில் ராஜபக்சேவுடன் இணைந்து நரேந்திரமோடி நாடகமாடியுள்ளார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

வைகோவின் இந்த செயல் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியை கட்சி மேலிடம் கண்டிக்காதது ம.தி.மு.க.வினரை எரிச்சலடைய செய்தது.

இந்த நிலையில், நரேந்திரமோடி பற்றி கருத்து தெரிவித்த வைகோவுக்கு, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் எச்சரிக்கை விடுத்தார். இது ம.தி.மு.க.வினரை மேலும் கோபமடைய செய்தது. பா.ஜ.க. - ம.தி.மு.க. இடையே மோதல் வலுத்து வந்த நிலையில், இனியும் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற வேண்டுமா? என்று முடிவு எடுக்கும் நிலைக்கு ம.தி.மு.க. தள்ளப்பட்டது.

இந்த நிலையில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர்நிலைக்குழு கூட்டம் ஆகியவை சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்திச் சென்றபோது, கூட்டணி கட்சிகளிடம் இருந்த அணுகுமுறை, தற்போது நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ. கூட்டணியில் இல்லை. எனவே, தமிழகத்தில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுகிறது என்று தெரிவித்தார்.

.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்