naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

31 Aug 2015

வீரத்தமிழர் முன்னணியின் கிராமப் பூசாரிகள் மாநாடு...


வீரத்தமிழர் முன்னணி ஆகஸ்ட் 30-2015 அன்று திருப்பூரில் நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாட்டில் செந்தமிழன் சீமான் ஆற்றிய மரபியல் மீட்சியுரையில் இருந்து சில ....
------------------------------------------------------------

1.தமிழ்நாட்டில் நடக்கிற திருமணங்கள்,கோவில் விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கேரள செண்டை மேளத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தமிழர்களின் பாரம்பரிய தவில்,மேளம், நாயனம், நையாண்டி மேளம் போன்ற இசைக்கலைகளை ஊக்குவிக்க வேண்டும் -இனி செண்டை மேளத்தை பயன்படுத்தும் விழாக்களை எதிர்த்து நாங்கள் போராடுவோம்.
2. இந்து மதம் என்பது கிருஸ்தவ,இஸ்லாமிய மதங்களைப் போலவே இறக்குமதியான ஒன்று. அது தமிழர்களின் மதம் இல்லை.
3. கிராமப்பூசாரிகள் எப்போதும் தாய்மொழி வழிபாட்டை கைவிடக்கூடாது.
4. தெய்வங்கள் யார்- அவர்கள் எங்கள் முன்னோர்கள்.மூத்தோர்கள். அவர்கள் உயரிய செயல்களால் எங்கள் குலசாமியாகி போனார்கள். அவர்களை வழிபடுவது எங்களது கடமை.
5. தமிழக மக்களை ஜெயலலிதா,கருணாநிதி என்கிற இரண்டு நபர்களிடமிருந்து மீட்க வேண்டும்.
6. என் மண்ணை நான் ஆள வேண்டும் என கோருவது எனது தார்மீக உரிமை. அதை யாருக்காவும் ,எதற்காகவும் விட்டுத்தர இயலாது.
7. துரோகியால் கூட குற்றஞ்சாட்ட முடியாத புனிதராக நம் தலைவர் பிரபாகரன் விளங்கினார்.
8. இப்போது தன்னை இரணீய வம்சம், இராவண வம்சம் என பேசும் கருணாநிதி இராம் லீலா மைதானத்தில் தமிழனாகிய இராவணனை அம்பெய்தி கொல்லும் நிகழ்விற்கு என்றாவது கண்டனம் தெரிவித்துள்ளாரா...?
நீங்கள் இராவண வம்சம். நாங்கள் இராவண அம்சம்.
நன்றி:மணி செந்தில்





29 Aug 2015

நீண்ட இடைவெளிக்கு பின்பு சீமான் நடிக்கும் திரைப்படம்..!



தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘முந்திரிக்காடு.’ இந்தப் படத்தில் இயக்குநர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - G.A. சிவசுந்தர்
இசை - A.K. பிரியன். ( இவர்A.R.ரகுமானின் இசைப்பள்ளி மாணவர் 17 வயது கொண்ட இளைஞர் )
பாடல்கள் - கவிபாஸ்கர்
எடிட்டிங் - எல்.வி.கே.தாஸ்
கலை - மயில் கிருஷ்ணன்
ஸ்டண்ட் - லீ.முருகன்
தயாரிப்பு மேற்பார்வை - டி.ஜி. ராமகிருஷ்ணன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம்.
படம் பற்றி இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது, “முந்திரிக்காட்டு பகுதி மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப் போன முந்திரியின் விளைநிலங்களில், சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதும். அங்கே காதல் வயப்பட்ட இருவரின் காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரிவிக்க, காக்கி சட்டைக்கே உரிய கௌரவத்தை காப்பாற்றும் அன்பரசன் அந்த காதலர்களை சேர்த்து வைக்க எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா என்பதுதான் கதை.
தஞ்சை மாவட்டம், நெல்லை மாவட்டம் மற்றும் ஆந்திராவின் நகரி மற்றும் சென்னை போன்ற இடங்களிள் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கடலூர், பாண்டி உட்பட பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது..” என்றார்.





18 Aug 2015

அரசின் இலவச பொருட்களை ஒப்படைக்க வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது!

திருச்சியில் அரசின் இலவச பொருட்களை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் தினம்தினம் தீவிரமடைந்து வருகிறது. முதன்முதலில் கடந்த மாதம் மதுக்கடைகளை மூடக்கோரி, திருச்சியில்தான் மதுக்கடை ஒன்று, நாம்தமிழர் கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, அரசு வழங்கிய இலவச பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க, இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு கிளம்பிய நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு தலைமையிலான தொண்டர்கள், திருச்சி நீதிமன்றத்தின் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டு, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும்.. இலவச பொருட்கள் வேண்டாம்..!" என அறிவித்த போராட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையின் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் திருச்சி போலீஸார் அனுமதி மறுத்ததால், இன்று காலை 11 மணியளவில் திருச்சி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு,  நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் 20க்கும் மேற்பட்டோர் திரண்டனர். 
 
தமிழக அரசு வழங்கிய இலவச கலர் டிவி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்டவற்றை தலையில் சுமந்தபடி, "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும், இலவச பொருட்கள் வேண்டாம்!"  என டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி,   மாவட்ட ஆட்சியரிடம் அரசு வழங்கிய இலவச பொருட்களை ஒப்படைக்க புறப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்தவுடன் போலீஸார் தடுத்து நிறுத்தினர். வேறு வழியில்லாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதிமன்றத்திற்கு முன்பே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறிது நேரம் அங்கேயே தொடர்ந்து  கோஷம் போட்டுக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில்,  தலையில் அரசு இலவச டிவியை வைத்திருந்த வீரா என்பவர், அதனை ரோட்டில் தூக்கி போட்டு உடைக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்டோன்மெண்ட் காவல்துறை உதவி ஆணையர் அருள் அமரன், வீராவை தனியாக வேனில் ஏற்றினார். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், ஏசி அமரனின் நகம் கீறி வீராவின் தொண்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் விடாமல் போலீஸார் பலவந்தமாக வேனில் ஏற்றினர். இதனை தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதெல்லாம் முடிந்த பிறகு ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த போலீஸார், கடைசியில் விலையில்லா பொருட்களை பத்திரமாக பறிமுதல் செய்து, வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பினர்.
கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு கூறுகையில், "தமிழினத்தை சீரழிக்கும் சொல் இலவசம். ஆளும் அ.தி.மு.க.வும் சரி, ஆண்ட தி.மு.க.வும் சரி, மதுவில் வருகின்ற வருமானத்தில்தான் இலவசம் கொடுக்கின்றார்கள். எங்களுக்கு இரண்டுமே தேவையில்லை.
இதனை வலியுறுத்தி இலவச பொருட்கள் மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் சட்டப்படி நடத்த அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதிக்கப்பட்டது. பிறகு அமைதியாக ஆட்சியரிடம் இலவச பொருட்களை ஒப்படைக்கப்போன எங்களை தடுத்து நிறுத்தி, கைது செய்துள்ளார்கள். மிக மோசமாக நடத்தினார்கள். இந்த அடக்குமுறைகளை எல்லாம் கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம். மதுக்கடைகளை மூடும்வரை ஓயமாட்டோம்" என்றார் காட்டமாக.

15 Aug 2015

பணிநீக்க மிரட்டல்களைக் கைவிட்டுத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். -சீமான்

நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பணியாளர்கள் தங்களது புதிய மாற்று ஊதிய உயர்வு திட்டத்தைச் செயல்படுத்தக்கோரி போராட்டத்தைத் தொடங்கி நடத்திவருகின்றனர். அதுபோல, கடந்தாண்டு அங்கு பணியாற்றிய பதிமூன்றாயிரம் ஒப்பந்தப்பணியாளர்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரியும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். தொழிலாளர்களின் போராட்டம் பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பலனளிக்காமல் தொடர்ந்து வருகிறது. மேலும், நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனம் இந்தியாவிலேயே தலைசிறந்த இலாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவனம் 2014-15 இவ்வாண்டு சுமார் 1500 கோடி நிகரலாபம் ஈட்டி இருக்கிறது என்றால் அது எமது மக்களின் கடும் உழைப்பால்தான் அதை நிகழ்த்த முடிந்தது என்பதை நிறுவனத்திலுள்ள வெளிமாநில உயரதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
நிலத்தையும் நீரையும் இழந்து அதனால் ஆண்டாண்டுக் காலமாக தாங்கள் செய்துவந்த வேளாண்மைத் தொழிலையும் பறிகொடுத்து வாழ்விழந்து எமது மக்கள் இந்நாட்டிற்குச் செய்திருக்கிற பெரும் ஈகத்தை நன்றியுணர்வுடனும், மனிதநேயப் பண்புடனும் உயரதிகாரிகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து வெறும் வறட்டுத்தனமான போக்குடன் தொழிலாளர்களை மிரட்டி பணிய வைக்கலாம் என்றால் அது முடியாது.
கடந்த ஆண்டு நடைபெற்றப் போராட்டங்களின் தீர்வாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு நிறுவனம் ஒப்புக்கொண்டபடி தொழிலாளர்களை நிலையான பணியமர்த்தம் செய்யாமல் மிகக்குறைந்த எண்ணிக்கையில் மட்டும் தொழிலாளர்களை நிலையான பணியமர்த்தம் செய்து கண்துடைப்பு நாடகங்களை மேற்கொண்டுவரும் நிருவாகம், தற்போது கடந்த ஆண்டு போராட்டத்தைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டித் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தலைவர் பா.திருமாவளவனை 11-08-15 முதல் பணிநீக்கம் செய்திருப்பது பெரும்அடாவடித்தனமாகும். இதை வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக இந்தப் பணிநீக்க ஆணையை நெய்வேலி நிருவாகம் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகின்றேன். மேலும், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கப் பணியாளர்கள்  நியமனத்திலும்
மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படை கோட்பாட்டிற்கு முரணாகத் தமிழகத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து வெளிமாநில தொழிலாளர்களைப் கொத்தடிமைத்தனமாக பணிநியமனம் செய்து வருகிறது.

கடந்த ஐந்தாண்டில் மட்டும் நிரப்பப்பட்ட 250 பட்டயப்பொறியாளர்களின் நியமனத்தில் 4 பேர் மட்டுமே தமிழர். 160 சுரங்கத்தொழிலாளர்களில் 3 பேர் மட்டுமே தமிழர். மனித வளத்துறையில் 10 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர் மற்ற அனைவரும் பிற மாநிலத்தவர்களைக் கொண்டு பணிநியமனம் செய்திருப்பது அந்த மண்ணையும் இழந்து வேலைவாய்ப்பையும் இழந்து தவிக்கும் மக்களின் வெந்தபுண்ணில் வேல் கொண்டு குத்துவது போன்ற கொடிய செயலாகக் கருத வேண்டியுள்ளது.
அதுபோல், ஆண்டாண்டுக் காலமாக அம்மண்ணில் குடியிருந்துவரும் விருத்தாச்சலம் வட்டம் தாண்டவன்குப்பம் கிராமத்தில் சுமார் 1500குடும்பங்களைச் சார்ந்த 5000 மக்களுக்கு மின்வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, பள்ளிக்கூட வசதி, மருத்துவ வசதி என எவ்வகையான அடிப்படை வசதிகளையும் செய்துதரவிடாமல் அம்மக்களை வஞ்சித்துவரும் நிறுவனத்தின் போக்கு மிகவும் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க வன்கொடுமைப் போக்காகும்.
இவற்றை எல்லாம் வேடிக்கைப்பார்க்கும் அரசாகத் தமிழக அரசு இருப்பது மேலும் வருந்துவதற்குரிய ஒன்றாகும். எனவே, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உடனடியாக இவற்றை எல்லாம் உரியவாறு பேச்சுரை நடத்தி சுமூகமாக தீர்வு காண முன்வந்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
தமிழக அரசும் இதில் பாராமுகமாக இருப்பதைக் கைவிட்டு நமது தொழிலாளர்களின் நலனில் அக்கறைக்கொண்டு உடனடியாகத் தலையிட்டு சிக்கலுக்குத் தீர்வு காண முன்வர வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
`இல்லையேல், இதில் தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8 Aug 2015

பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் தெருமுனை கூட்டம..

பெரம்பலூர் மாவட்டம் நாம்தமிழர் கட்சியின் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் தெருமுனை கூட்டம நடைபெற்றது, 

நாள்-
====
08/08/2015, மாலை 6 மணி
தலைமை
=========
மாவட்ட செயலாளர் ப.அருள்
கொள்கை விளக்கவுரை
=========
திருச்சி நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இரா .பிரபு எழுச்சியுரை நிகழ்த்தினர்.
முன்னிலை
=========
மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார் , 
மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் ஜலால்லுதீன்.





பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

பெரம்பலூர் மாவட்டம், ஒலைப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் திமுக பிரமுகர் கருணாநிதியின் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும் ,ஊழல் முறைகேடுகளுக்கு துணை போகும் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) அவர்களை கண்டித்தும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமது, அவர்களை கண்டித்தும், ,இவர்கள் ஊழலை தட்டிகேட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.அருள் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் , மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பா.அருள் அவரகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கண்டன உரை : திருச்சி நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இரா .பிரபு .
அப்பா அசன் முகமது மாநில ஒருங்கிணைப்பாளர்,
சேது.மனோகரன்-திருச்சி மண்டல செயலாளர்
முஹமது யூசுப் மறுமலர்ச்சி தமுமுக,
கண்டன உரை நிகழ்த்தினார்
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார் , மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் ஜலால்லுதீன் , மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.






6 Aug 2015

கருணாநிதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். -சீமான்

டிசம்பர் 3 இயக்கம் சார்பாக மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் நேற்று (05-08-15) சென்னை, சேப்பாக்கத்தில் பட்டினிப்போராட்டம் செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவினையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு:
மதுவிலக்கு கோரி திமுகவும், வைகோவும் போராடுகிறார்கள்; ஆனால், அவர்களில் வைகோவின் மகன் சிகரெட் விற்கிறார். டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமாக சாராய ஆலைகள் இயங்குவதாக கூறுகிறார்களே, அப்படியென்றால், அவர்கள் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார்களே?
அதிலென்ன சந்தேகம்! சிகரெட் வியாபாரி மது வியாபாரத்தை கண்டித்து போராடுகிறார். மதுவை காய்ச்சி விற்பவர்கள் மதுவுக்கு எதிராக போராடுகிறார்கள். நாங்கள் போராடுகிறோம் என்றால், அதில் ஒரு நியாயமிருக்கிறது. 5 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியபோது மதுபானக்கடைகளை நடத்தியவர்கள் நாங்களும் போராடுகிறோம் என்றால், எப்படி ஏற்பது? 5 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சியிலும் மதுபானக்கடைகள் இருந்துகொண்டுதான் இருந்தது. அதிமுகவுக்கு மிடாஸ் ஆலைகள் என்றால், திமுகவுக்கு டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்றவர்களின் ஆலைகளிலிருந்து மது காய்ச்சி விற்கப்பட்டது. அப்படிப்பட்ட இவர்களுக்கு மதுவிலக்கைப் பற்றிப் பேச என்ன தகுதியும், நேர்மையும் இருக்கிறது? அப்படியென்றால், குறைந்தபட்சம் திமுகவினர் நடத்துகிற மதுபானக்கடைகளையாவது மூட வேண்டும். நான் கடந்த காலங்களில் செய்தது தவறென்று, மக்களிடம் கருணாநிதி பொதுமன்னிப்பு கோர வேண்டும். இன்றைக்கு குழந்தைகள், மாணவர்கள் குடிக்கிறார்கள் என்று கருணாநிதி கூறுகிறார். மாணவர்களும், குழந்தைகளும் குடிப்பார்கள் என்ற தொலைநோக்குப்பார்வை கூடவா இல்லாது கருணாநிதி இவ்வளவு ஆண்டுகளாக நாட்டையாண்டார்? 2006-யிலும் மதுவிலக்கை கொண்டுவருவேன் எனக் கூறினார் கருணாநிதி. வந்தபிறகு, சட்டமன்றத்தில் சாத்தியமில்லை என்றார். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மூடுவேன் என்கிறார். வந்தபோது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார். மதுவுக்கு எதிராக மக்களுக்கு வெறுப்புணர்வும், கோபமும் இருக்கிறது; வருகிற தேர்தலில் முக்கியக்காரணியாக மது இருக்கும் என்பதால் கருணாநிதி மதுவிலக்கைப் பற்றிப் சொல்கிறார். அதனால், இதுவெல்லாம் மக்களை ஏமாற்றுகிற வேலை.
மதுபானக்கடைகளை மூடக்கோரி மக்கள் நடத்துகிற போராட்டங்களை அரசு எப்படி அணுகுகிறது?
பள்ளி, கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், வழிபாட்டுத்தலங்கள் அருகிலும் கடைகள் இருக்கிறது. அங்கு பெண்கள் கடந்து செல்ல முடியவில்லை. கடந்து செல்லும் பெண்கள் எல்லாம் முகச்சுழிப்போடும், வேதனையோடும் செல்கிறார்கள். பள்ளிகளுக்கு, பெண்பிள்ளைகளை அனுப்ப முடியவில்லை என்று தாய்மார்கள் வேதனைப்படுகிறார்கள். இதுபோன்ற இடங்களில் இருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடுங்கள் என்றுதான் குறைந்தபட்ச கோரிக்கை வைக்கிறோம். அந்தக் கோரிக்கையை வைத்துதான் ஐயா சசிபெருமாள் போராடி, செத்தார். அவரது உடல் இன்னும் அடக்கம்செய்யாமலிருக்கிறது. அதனைப்பற்றி எவரும் பேசவில்லை. அவரது குடும்பங்கள் இன்னும் பட்டினிப்போராட்டம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன மதுபானக்கடைகளை எங்கள் பெயருக்கு எழுதி வையுங்கள் என்றா கேட்கிறார்கள்? குறைந்தபட்சம் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் பக்கத்திலிருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடிவிடுங்கள் என்றுதானே கேட்கிறார்கள், அதனைக்கூட அரசால் செய்ய முடியாதா? போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காவிட்டால் அப்புறம் என்ன மக்களாட்சி? மக்களால் நான்! மக்களுக்காக நான் என்ற முழக்கமெல்லாம்? இங்கே போராடுகிற மாற்றுத்திறனாளிகள் மண்ணின் மீது, மக்களின் மீதுள்ள பற்றினால் போராட்டம் செய்கிறார்கள். மது குடித்துவிட்டு விபத்தாகி இறக்காது இருப்பவன் மாற்றுத்திறனாளியாகத்தானே போவான். எங்களைப் போல இன்னொருவர் உருவாகக்கூடாது என்றுதானே இவர்கள் போராடுகிறார்கள், இந்தப் போராட்டம் செய்பவர்களை அடிப்படை வசதியில்லாத இடத்தில் அடைக்கிறார்கள். அடித்து துன்புறுத்தி வசதியில்லாத இடத்தில் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். இதுதான் மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள் செய்கிற செயலா? போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கொஞ்சம் கொஞ்சமாக கடைகளை குறைக்கிறேன்; கல்விக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கிற கடைகளையாவது அகற்றுகிறேன் என அரசு வாய்திறந்து பதில் சொல்ல வேண்டும். பக்கத்தில் கேரளா நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது. அதனால், கேரளாவைப் போல படிப்படியாக 6000 மதுபானக்கடைகளில் குறைந்தது 500 மதுபானக்கடைகளையாவது மூட வேண்டும். அதனையெல்லாம் விடுத்து ஒன்றும் செய்யாமல் இருப்பது, மக்களுக்கும், அரசுக்குமான ஒரு அகந்தைப்போர் போலதான் இருக்கிறது.
சிறையில் அடைப்பதன்மூலம் இந்தப்போராட்டத்தை ஒடுக்க முடியுமா?
4000 பேர் என்பதால், சிறையில் அடைத்துவிட்டார்கள்; 4 இலட்சம் பேர் வந்தால் என்ன செய்வார்கள்? அப்படியெல்லாம், அரசு செய்வது முறையாகாது. மக்களின் கோரிக்கை நியாயமானதா? இல்லையா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். சாத்தியமா? இல்லையா? என்பதையெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. மக்களுக்குத் தேவையா? இல்லையா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். பக்கத்துக்கு மாநிலத்துக்கு போய் குடித்து விடுவான் என்று காரணம் சொல்கிறார்கள். தெருவுக்கு 2 மதுபானக்கடை வைத்திருக்கும்போது, குடிப்பவனைவிட பக்கத்துக்கு மாநிலத்தில் போய் குடிப்பவனின் எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும். அப்படியென்றால், குடிப்பவர்களின் எண்ணிக்கையாவது குறையுமல்லவா? அதனால், இந்தப் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது வேறொரு பக்கம் வெடித்துக்கொண்டிருக்கும். அதனால், அரசு அதனை செய்யக்கூடாது. அப்படிப் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் அது அராஜகம்; அதிகாரத்திமிர்.

5 Aug 2015

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 08/08/2015 மாலை 4மணி
இடம் : புதிய பேருந்து நிலையம்
இவன் .
மு.ஜலால்லுதீன்
மாவட்ட செயலாளர் மாணவர் பாசறை



31 Jul 2015

மதுவை ஒழிக்க தன்னுயிரை தியாகம் செய்தவர் அய்யா சசிபெருமாள் – செந்தமிழர் சீமான் உருக்கம்



உயிரையும் பொருட்படுத்தாமல் சாவை முன்னிறுத்தி அய்யா சசிபெருமாள் மது ஒழிப்பிற்காக போராடினார் என்று செந்தமிழர் சீமான் உருக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் பல வழிகளில் மது ஒழிப்பிற்காக போராட்டத்தை முன்னிறுத்திய காந்தியவாதி அய்யா சசிபெருமாள் இன்று மக்களின் உயிரை குடிக்கும் மதுவை ஒழிக்க தன்னுயிரை கொடுத்துள்ளார் என்றும், இந்த ஒரு உயிரை நினைத்தாவது தமிழக அரசு ஒட்டுமொத்த தமிழர்களின் உயிரை காப்பாற்ற மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யாவின் உயிரிழப்பு மது பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்த சீமான், இனியும் தமிழக அரசு மதுக்கடைகளை மூடாவிட்டால் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என்று தெரிவித்தார்.

28 Jul 2015

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-15 அன்று கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள் பின்வருமாறு:
1) கடலூர் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தூண்டில் முள்வளைவு அமைத்திட வேண்டும்.
2) கடலூரில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி ரூ.5 இலட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
3)கடலூர் கெடிலம் ஆற்றின் நீர் வளத்தையும், நிலவளத்தையும் நாசப்படுத்தும் நெல்லிக்குப்பம் EID பாரி சர்க்கரை ஆளைக் கழிவை அப்புறப்படுத்த வேண்டும்.
4)பெரியப்பட்டில் சாய தொழிற்சாலையை நிறுவி விவசாய நிலத்தையும், நீர் வளத்தையும், கடல் வளத்தையும் கூட்டாக அழிக்கும் SIMA சாயத்தொழிற்சாலையை தடைசெய்யக்கோரியும்
5)நெல்லிக்குப்பம் நகர பகுதியில் திருக்குளம், பனந்தோப்பு, ஆரோக்கியசாமி தெரு, ரகுமான் நகர் ஆகிய மக்கள் வசிக்கும் பகுதியின் நடுவில் நகராட்சி குப்பைகள் கொட்டுவதை தடுத்து, குப்பைகளை அகற்ற வேண்டும்.

21 Jul 2015

சில நேரங்களில் பல கேள்விகள்- மணி செந்தில்..


தமிழ்த்தேசிய கருத்தியல் குறித்து இணைய வெளிகளில் ,கருத்துத்தளங்களில் பரவலாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கும் தமிழ்த்தேசியர்கள் குறித்தும் பல்வேறு தவறான கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
எந்த அதிகாரத்தினால் தமிழ்த்தேசிய இனம் வீழ்ச்சியுற்றதோ அந்த அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்கிற முழக்கத்தை முன் வைத்து நகரும் தமிழின இளைஞர்களை முதலமைச்சர் ஆக கனவு காண்கிறார்கள், முதலமைச்சுத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் வசவுகள் பொழிகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற முனையும் தமிழ்த்தேசியர்களை வலது சாரி தமிழ்த்தேசியவாதிகள் என்று வசைபாடும் பெரியவர்கள்… முதலமைச்சு திராவிடம், வலது சாரி திராவிடம் போன்றதான விமர்சனங்களை தப்பித்தவறி கூட முன் மொழிவதில்லை என்பது வெளிப்படை.
மக்கள் ஆதரவை திரட்டி, மற்ற திராவிடக் கட்சிகள் போல எங்களுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, தமிழ்த்தேசிய கருத்தியல் வெகு சன மக்களை கவர்கிற கருத்தியல் என நிருபிக்க போராடும் இளையோர்களை குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரை நோக்கி தாறுமாறாக விமர்சன அம்புகள் எய்யப்படுவதன் உள்நோக்கத்தை நாம் ஆராய வேண்டும்.
அப்படி இவர்கள் வெறுக்கும் வகையில் நாங்கள் என்ன செய்து விட்டோம்….?
கருத்தரங்குகளில், அரங்கங்களுக்குள் நடக்கும் மாநாடுகளில் (?) ,வயதானவர்களில் ஜிப்பா பைகளில், நரைத்த முடிகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கருத்தியலை பல லட்சக்கணக்கான வெகு மக்களுக்கான கருத்தியலாக வெகுசனமயமாக்கியதும், பிழைப்புவாத போலி திராவிட அரசியல் கருத்தியலுக்கு மாற்றாக முன் நிறுத்தியதையும் தவிர நாங்கள் செய்த குற்றம் என்ன..?
யாருக்கு ஆதரவாக எங்கள் மீது வசவு அம்புகளை இவர்கள் எய்கிறார்கள்..?
தமிழ்த்தேசியவாதிகள் வெகுசன அரசியல் பாதைக்கோ, அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல் பாதைக்கோ வந்து விடக்கூடாது என்பதில் திராவிட அரசியல் வாதிகளை விட கவனமாக இருப்பது ‘ கருத்தரங்க’ தமிழ்த்தேசியர்கள் தான்.
.. அற்பமான (?) இந்த தேர்தல் வெற்றியை கூட பெற முடியாத, மக்கள் ஆதரவு இல்லாத ,சொல்லப்போனால் வெகு சன மக்கள் நிராகரிக்கிற தேர்தல் புறக்கணிப்பு தமிழ்த்தேசியம் எப்போதும் திராவிட அரசியலுக்கு ஆதரவாகவே இருப்பது ஏன்…?
இந்திய கட்டமைப்பாகவே இருந்து விட்டு போகட்டும். தமிழர்கள் ஆண்டு விட்டுதான் போகட்டுமே.. தெலுங்கர்,கன்னடர் தமிழ்நாட்டை ஆளலாம்..தமிழன் ஆளக்கூடாதா… இது தமிழனை தவிர்த்த மற்றவர்களுக்கான உரிமையா..? குறைந்த பட்சம் இந்தியக்கட்டமைப்புக்குள்ளாகவே ஆள வக்கற்ற, அதிகாரமற்ற தமிழன்…எப்படி தனக்கென ஒரு நாடு அடைவான்…? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது..?
எதற்கெடுத்தாலும் பெரியார் என்கிற பாதுகாப்பு கேடயத்தை முன் நிறுத்தும் இவர்கள் பல முறை தனக்கு முதல்வர் வாய்ப்பு தனக்கு வந்தும் கூட..பெரியார் ”பச்சைத்தமிழன்” காமராசருக்கு தானே வாக்கு கேட்டார்… என்கிற உண்மையை மறைக்க துடிப்பது ஏன்..?
தேர்தலில் நிற்பது தவறென்றால்..வாக்கு கேட்பது சரியா…? ( தங்களுக்கு “வேண்டியவர்களுக்கு” மட்டும் வாக்கு கேட்பது தமிழ்த்தேசிய எல்லைக்கு அப்பால் என்றெல்லாம் மனசாட்சி கேட்டால் நாம் பொறுப்பல்ல..)
சரி.தேர்தலில் நிற்கவேண்டாம்.
கருணாநிதி,ஜெயலலிதாவே ஆண்டு விட்டு போகட்டும், அதற்கு பிற ஆள அவர்களது வாரிசுகள் இருக்கிறார்கள். நாம் அடிமைகளாக இருப்போம். தேர்தல் அரசியலில் நிற்காமல் மக்களை திரட்ட, மக்களை தமிழ்த்தேசிய கருத்தியலை நோக்கி ஈர்க்க , தமிழர்களை திரட்டி தமிழ்த்தேசம் சமைக்க… என்ன என்ன முயற்சிகள்.. எத்தனை ஆண்டு காலத்தில்…? விளக்குவார்களா இவர்கள்…???
தமிழர்கள் என்று சொன்னால் பிறப்பு அடிப்படையிலான குருதி தூய்மை..சரி. திராவிடர்களை நீங்கள் எதை கொண்டு வரையறை செய்தீர்கள் – ஏழை பணக்காரன் பார்த்தா..நல்லவன் கெட்டவன் பார்த்தா…? எதை கொண்டு திராவிடர்களை பிரிக்கிறீர்கள்.வரையறை செய்கிறீர்கள்…?
மக்களை வெல்லாமல், வெகு மக்களை திரட்டாமல்..மானுட எல்லைகளுக்கு (?) அப்பால் ஒரு தத்துவத்தை கட்டமைத்து, வாத பிரதிவாதங்கள் செய்வதன் மூலமாக மட்டுமே ஒரு தேசம் உருவாகி விட முடியுமா…அதற்கான மானுட உளவியல் விழைவை, தேவையை இம்மண்ணில் இதுவரை யாராவது ஏற்படுத்தி இருக்கிறார்களா…?
seeman_2417919f
எப்போதும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது மக்கள் ஆதரவை சார்ந்தது. மக்களை வெல்லாமல் எதையும் நாம் அடைய முடியாது. எப்போதும் பலவீனப்பட்ட சிறு சிறு குழுக்களின் தத்துவமாக தமிழ்த்தேசிய கருத்தியல் இருந்த காலக்கட்டம் முடிந்து விட்டது. இன்றைய தமிழின இளையோர் தமிழ்த்தேசிய கருத்தியலை வெகுசன ஆதரவு கருத்தியலாக விதைப்பதில் வென்று காட்டி இருக்கிறார்கள்.
கடந்த 2009 க்கு பிறகான தமிழின வரலாற்றிலும், தமிழின இளையோர் சிந்தனையோட்டத்திலும் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை புறம் தள்ளி , அவர்களை வலது சாரி, உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள், குருதித்தூய்மை பார்ப்பவர்கள் என்றெல்லாம் ஏசி முறியடிக்க விரும்புவது திராவிட பித்தலாட்ட அரசியலுக்கு அப்பட்டமாக துணை செய்யதானே..?
நமது மண்ணில் பிழைக்க வந்திருக்கிற வேற்று இனத்து உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பரசியல் குறித்தெல்லாம் சிந்திக்கிற இவர்கள்…இங்கிருந்து உலகம் முழுக்க பிழைக்கப் போன எம்மின மக்கள் குறித்து கரிசனம் கொண்டிருக்கிறார்களா… ? பெருமுதலாளிகளாக இம்மண்ணை சுரண்டி வாழும் நிறுவனங்களான ஜோஸ் ஆலுக்காஸ். ஜோய் ஆலுக்காஸ், முத்தூட் பைனான்ஸ், பல திரைப்பட நிறுவனங்கள்,குளிர்பான நிறுவனங்கள், உள்ளீட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விமர்சனம் சார்ந்த எங்களது வெறுப்பரசியல் இம்மண்ணில் பிழைக்க வந்துள்ள பிற இனத்து உழைக்கும் மக்கள் மீது என்றாவது பாய்ந்திருக்கிறதா…??
அதற்கான ஆதாரங்களை பெரியவர்கள் வெளியிடுவார்களா..?
தமிழ்நாட்டை வந்தேறிகளின் வேட்டைகாடாக விடமாட்டோம் என்கிற இம்மண்ணின் பூர்வீகக்குடிகளின் அடிவயிற்றுக் குரல்… ஏன் உங்களுக்கு சுருதி பேதமாக ஒலிக்கிறது…??
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அலைபோல எழுகின்றன.
ஏனென்றால் காலங்காலமாக காற்றில் கரைந்துப் போன கற்பூரமாய் இருந்த அக்குரல் இப்போது திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு எதிரான இடி முழக்கமாய் முழங்க தொடங்கிவிட்டது.. செத்துக் கொண்டிருக்கிற திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு தத்துவார்த்தமாக வலிமை சேர்க்கவே இப்படிப்பட்ட கூப்பாடுகள் என்பதை நாங்கள் அறிவோம்.
நாங்கள் உறுதியான குரலில் ,எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கிற எம்மின விடுதலை மீது பற்றுறுதி கொண்டு அறிவிக்கிறோம் . யாரும் வரலாம். வாழலாம். இம்மண்ணில். வந்தவர்களை வாழ வைப்போம்.. அது எம்மினத்தின் பண்பாட்டுப் பெருமை. ஆனால் எம் சொந்தவர்களை மட்டுமே ஆள வைப்போம். அது தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.
நாங்கள் முன் வைக்கிற முழக்கங்கள் உறுதியாக பிற இனத்தார் மீதான வெறுப்பரசியல் இல்லை. அவை எங்கள் அடிப்படை உரிமைகள் சார்ந்தவை.
பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களையும், இந்திய பெருநிலத்தில் தோன்றிய மகத்தான பெருமகன் அண்ணல் அம்பேத்கார் அவர்களையும் நாங்கள் பெருமதிப்புடன் அணுகுவதில் ஒரு போதும் பிழை செய்வதில்லை. இருண்ட உலகிற்கு வெளிச்சம் காட்ட பிறந்த அந்த தீப்பந்தங்களின் ஆதி மூலம் குறித்து நாங்கள் ஆராய்வதில்லை. அவர்கள் மட்டுமல்ல மாமேதை மார்க்ஸ் தொடங்கி தத்துவங்கள் மூலம், நெறிகள் மூலம், வாழ்வியல் மூலம் வழிகாட்டிய மாபெரும் மனிதர்களை நாங்கள் ஒருபோதும் மதிக்காமல் கடந்ததில்லை. மாறாக அவர்கள் உலகம் தழுவிய அடிமைப்பட்டு கிடக்கிற இன மக்களுக்கான வழிகாட்டிகள் என்பதை நாங்கள் நெஞ்சார உணர்ந்துள்ளோம்.
அதே சமயத்தில் எம்மினத்தில் பிறந்த பேரறிஞர் அயோத்திதாசர் பண்டிதர் அவர்களையும், எம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களையும், பேராசான் ஜீவா அவர்களையும், இன்னும் பிற தமிழ்த்தேசிய கருத்தியல் தளம் சார்ந்து இயங்கிய எங்கள் பாட்டன்களையும் நாங்கள் எங்கள் குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவர்களை எங்கள் முன்னோடிகளாக, எங்கள் தலைவர்களாக போற்றுகிறோம்.
தவறான விமர்சனங்களை பரப்புவதன் மூலம் தமிழின இளைஞர்களின் அரசியல் பாதையை அழித்து..திராவிட பிழைப்பு வாத அரசியலுக்கு மறு உயிர் கொடுக்கிற முயற்சிகளை எங்களால் உணர முடிகிறது.
.இலட்சக்கணக்கான எம் உறவுகளும், எம்மினத்தின் மாவீரர்களும் பற்ற வைத்த பெருநெருப்பு பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த நெருப்பை உள்ளத்தில் சுமந்து…தங்களை வீழ்த்திய அனைத்தையும் எதிர்க்கிற, வெல்கிற வலிமையை தமிழின இளைஞர்கள் இன்று பெற்றுள்ளனர்.
அவ்வலிமையை கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் பாதையை தமிழர்களே தீர்மானிப்பார்கள்.
எங்களுக்கு முன்னதாக இக்களத்தில் பணி செய்தோர்,பயணம் செய்தோர்,பங்களிப்பு செய்தோர்களின் தியாகத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். எம்மீது கல்லெறிந்து போகிற பெரியவர்களின் பெயர் கூட சொல்லாமல் கண்ணியமாக நகர்ந்து போகிறோம். ஆனால் உங்களது தியாகமும், அறிவும் தமிழ்த்தேசிய இனத்திற்கு பயன்பட வேண்டுமே ஒழிய , கருணாநிதி,ஜெயலலிதா, போன்ற திராவிட அரசியல் பிழைப்புவாதிகளின் அரசியல் எதிர்காலத்தை சவால்களுக்கு உள்ளாக்கி இருக்கிற இந்த இளைய பிள்ளைகளின் மீதான வன்மமாக,எதிர்ப்பாக மாறி விடக்கூடாது என்கிற வேண்டுகோளையும் நாங்கள் இக்கணத்தில் விடுக்கிறோம்.
எப்போதும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வலிமையாக தமிழின இளையோர் கம்பீரமாக நிற்கிறோம். ஆதரவாய் இருக்க விரும்புவோர் அருகில் வாருங்கள். நன்மொழி கூறுங்கள்.
அவதூற்றி எதிரிகளை பலப்படுத்த விரும்புவோர் தாராளமாக எதிரிகளுடனேயே நில்லுங்கள்.
கருணாநிதி,ஜெயலலிதாவை ஆதரிப்பதும், அவர்களையே ஆள வைப்பதுதான் இடது சாரி தமிழ்த்தேசியம் என்றால்…(நன்றி:சுப.வீ) அக்கனவை அழித்து, எம்மண்ணை இம்மண்ணின் பூர்வக்குடிகளே ஆளட்டும் என முழங்கிற நாங்கள் வலதுசாரி தமிழ்த்தேசியர்களே..
சில வருடங்களுக்கு முன் ஈழ அரசியலில் கலையரசன், சோபா சக்தி போன்றோர் எம்மினத்தின் விடுதலைக்காக தன்னுயிர் தந்த மாவீரர்களான, எம்மின தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளை வலது சாரிகள் என வசை மொழிகள் பொழிந்தது நினைவுக்கு வருகிறது…
அந்த வலதுசாரிகள் தான் இறுதிவரை மண்ணை காக்க போராடி உயிர் ஈந்தார்கள்.
இந்த வலதுசாரிகள் தான் இம்மண்ணை காக்க போராட மக்களுடன் களத்தில் நிற்கிறார்கள்..
காலம் உணர்த்தும். தவறான கணக்கு திருத்தும்.
.யார் வலது சாரி, இடது சாரி என…
..மணி செந்தில்

17 Jul 2015

60 மேற்பட்ட மாணவிகள் கைது- சாராயக்கடையை நொருங்கிய நாம் தமிழர்

வேலூரில் பள்ளிக்கு அருகில் இருந்த அரசு மது கடையை மூட கோரி போராட்டம் நடத்திய 60 க்கும் மேற்பட்ட மாணவிகளை காவல் துறை கைது செய்ததை தொடர்ந்து, திருச்சியில் அகிம்சை போராட்டத்தை அரசு மதிக்காததால் பல பள்ளிகளுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடை நாம் தமிழர் கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது!!!
"குடித்த இளைஞர்களை பார்த்திருக்கிறோம்டாஸ்மாக்கை அடித்த இளைஞர்களை இப்போதுதான் பார்க்கிறோம்"உண்ணாவிரத போராட்டங்கள், முற்றுகை போராட்டங்கள், கண்ணீர் போராட்டங்கள் என பல போராட்டங்களை தமிழக மக்கள் இந்த டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நடத்திவிட்டார்கள்.ஒரு போராட்டத்திற்குகூட தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. நீதிமன்றம் நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை மூட சொல்லியும் முழுமையாக அதை அரசு பின்பற்றவில்லை.

அதற்க்கான கொள்கையும் தமிழக அரசிடம் இல்லை. நீதிமன்றமோ சாராயம் விற்று மக்களை கொல்வது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட்டு மக்களை நாங்கள் காப்பாற்ற மாட்டோம் என்று அறிவித்துவிட்டது. இனி என்ன தான் செய்வார்கள் மக்கள்?நாம் தமிழர் கட்சியினரை போல தமிழகமெங்கும் மக்கள் உருட்டுகட்டைகளைசாராய கடைகளுக்கு எதிராக எடுத்தால் தமிழக அரசு என்ன செய்யும்? .ஆனால் உருட்டு கட்டைகளை விட உங்கள் வாக்கு வலிமையானது. 

மதுவிலக்கு அறிவிக்காத கட்சிகளுக்கு எங்கள் வாக்கு இல்லை என்று மக்கள் உறுதி
ஏற்கவேண்டும். 2016 தேர்தல் மதுவிலக்கு கொண்டு வரப்போகும் தேர்தல்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியினர், இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கிருந்த டாஸ்மாக் மதுபான கடைக்குச்சென்ற நாம் தமிழர் கட்சியினர் பணியிலிருந்த ஊழியர்களை வெளியேற்றினர். பின்னர் சவுக்கு கட்டைகளைக் கொண்டு, மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.

15 Jul 2015

டாஸ்மாக் கடையை சூறையாடிய நாம் தமிழர் கட்சியினர்: பல லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் சேதம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிந்தாமணியில் நாம் தமிழகர் கட்சியினர் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு உள்ள டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் சூறையாடினர். இதில் பல லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அடித்து நொறுங்ககப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மார்க் எண் 10296 கடையின் பொறுப்பாளர் பிரகாஷ் உள்ளி்ட்டவர்களை வெளியே அனுப்பிவிட்டவர்கள், கடைக்கு வெளியே உள்ள நாகநாதர் டீக்கடையில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்துவிட்டு டாஸ்மார்க் கடையில் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஷோக்கேஸ்சில் பாட்டில்களை அடித்து நொருக்கினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீஸார் 6 பேரை கைது செய்துள்ளனர். முனியப்பன் (வயது 23), கோபி (23), பீரேம் ஆன்ந்த (23), சரவணன் (26), விஜய் (23), சிவா (22).

13 Jul 2015

வசதி குறைந்தோருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. மலேசிய நாம் தமிழர் இயக்கம்



மலேசியா நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ.கலைமுகிலன் தலைமையில் வசதி குறைந்தோருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வின் போது உரையாற்றிய அவர் , கிராமப்புறத்தில் புறாட்க்கள் போல் வாழ்ந்து வந்த தமிழர்கள் கூட்டதை , இன்று தலைநகரில் மலிவு அடுக்குமாடி வீட்டில் தங்கவைத்து சிறை கைதிகள் போல் இங்குள்ள மக்களின் வாழ்க்கை ஓடிகொண்டிருகிறது என்றார். தமிழர்கள் மத்தியில் தலைவிரித்தாடும் ஏழ்மையை ஒழிக்க , தமிழர்களுக்கான புதிய பொருளாதார திட்டத்தையும் தத்துவத்தையும் உருவாக்கி உள்ளதாக கலைமுகிலன் தெரிவித்தார். நாம் முதலில் ஏனோதானமான போக்கை கை விட்டு வாழ்ந்தால் , தமிழர்களும் உயரலாம் என்றார்.









.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்