தமிழக மீனவர்கள் 14 பேருக்கு டிசம்பர் 5 வரை காவல்!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரையும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை சிறை வைக்க ஊர்காவல்துறை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் (22 ஆம் தேதி) 669 விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. அன்று இரவு மீன் பிடித்துவிட்டு நேற்று காலை அனைத்து படகுகளும் கரை திரும்பி கொண்டிருந்தன. அப்போது, ராமேஸ்வரத்தை சேர்ந்த நம்புசேகர் என்பவரது படகு பழுதடைந்தது. படகில் இருந்த மீனவர்கள் தல்வின்ராஜ், டான்போஸ்கோ, களஞ்சியம், சரவணன் ஆகியோர் பழுதை சரி செய்ய முயன்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பழுதடைந்த படகுடன் 4 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.
இதே போல், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் பழுதடைந்துள்ளது. இதனால், கரை திரும்பாத அந்த படனை தேடி மாற்றுப்படகு ஒன்றில் 5 மீனவர்கள் சென்றுள்ளனர். பழுதான படகினையும் அதில் இருந்த மீனவர்கள் 5 பேரையும் சிறை பிடித்த இலங்கை கடற்படையினர், மாற்றுப்படகில் தேடி வந்த 5 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்களும் விசாரணைக்கு பின் ஊர்காவல் துறை நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் 14 பேரையும் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி வரை சிறை வைக்குமாறு நீதிபதி சபேசன் உத்தரவிட்டார். இதையடுத்து, 12 மீனவர்கள் யாழ்ப்பானம் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற இரு மீனவர்களும் சிறு வயதினர் என்பதால் சிறுவர்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே தமிழக மீனவர்கள் 24 பேர் கடந்த 2 மாதங்களாக இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 14 மீனவர்கள் சிறை பிடித்து செல்லப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


0 கருத்துகள்:
Post a Comment