பள்ளி ஆசிரியை திடீர் சாவு விஷ காய்ச்சலால் இறந்தாரா? மருத்துவ குழுவினர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ காய்ச்சலால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தொண்டமான்துறையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையும், கோபாலகிருஷ்ணனின் மனைவியுமான சோபியா (வயது 34) என்பவரும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் அவர், சிகிச்சைக்காக கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சோபியா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் சோபியா பரிதாபமாக இறந்தார். சோபியாவின் கணவர் கோபாலகிருஷ்ணன் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சோபியா இறந்தாரா? என பெரம்பலூர் மாவட்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment